உலக தரவரிசை பட்டியல்: நீர்வள ஆராய்ச்சி பிரிவில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 7-வது இடம்
உலக தரவரிசை பட்டியல்:
நீர்வள ஆராய்ச்சி பிரிவில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 7-வது இடம்
சென்னை, ஏப்.26-
2020-ம் ஆண்டுக்கான ‘டைம்ஸ்’ உலக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நீர்வள ஆராய்ச்சி பிரிவில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 7-வது இடம் கிடைத்து இருக்கிறது.
‘டைம்ஸ்’ நிறுவனம்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘டைம்ஸ்’ நிறுவனம் ஆராய்ச்சிக்கான முக்கியத்துவம், ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியீடு, அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த உயர்கல்வி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை தயார்செய்து வெளியிடுகிறது.
அந்தவகையில் 2020-ம் ஆண்டுக்கான சிறந்த உயர்கல்வி பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை நீர்வளம், சுகாதாரம், வறுமை ஒழிப்பு, பசியின்மை உருவாக்குதல், பாலின சமத்துவம் உள்பட 17 பிரிவுகளின் கீழ் வெளியிட்டுள்ளது. இதில் 85 நாடுகளில் இருந்து 766 பல்கலைக்கழகங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகம் 7-வது இடம்
இந்த பட்டியலில் நீர்வளம் ஆராய்ச்சி பிரிவில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் 7-வது இடத்தை பிடித்து இருக்கிறது. நிலத்தடி நீர் பயன்பாடு, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பது, கடல்நீர் ஊடுருவலைத் தடுப்பது, கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவது, ஆறுகளில் ஏற்பட்டுள்ள மாசை கட்டுப்படுத்துவது, பொது சுகாதாரம் உள்ளிட்டவற்றில் சென்னை அண்ணா பல்கலைக்கழக நிலவியல் துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வந்தனர்.
மேலும், நீர்வளம் மற்றும் சுகாதாரத்தில் இஸ்ரோவின் உதவியுடன் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சி மற்றும் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகளை ஆராய்ந்த டைம்ஸ் நிறுவனம், பல்கலைக்கழகத்துக்கு இந்த பிரிவில் 70.1 மதிப்பெண்கள் வழங்கியது.
ஒட்டுமொத்த தரவரிசை பட்டியல்
இந்த பிரிவில் 63 நாடுகளின் 330 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் முதல் 10 இடத்துக்குள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதல் இடத்தை 81.4 மதிப்பெண்ணுடன் வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் பிடித்தது. இதே பிரிவில் இந்தியாவில் ஐ.ஐ.டி. காரக்பூர் 73.7 மதிப்பெண்ணுடன் 4-வது இடத்தையும், சென்னை ஐ.ஐ.டி. 62.5 மதிப்பெண்ணுடன் 32-வது இடத்தையும் பெற்றுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் இந்த பிரிவில் சாதித்ததோடு மட்டுமில்லாமல், 17 வகையான பிரிவுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில் 401 முதல் 600 இடங்களுக்குள் இடம்பெற்று இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘அடுத்த ஆண்டில், முதல் 200 இடங்களுக்குள் இடம்பிடிப்போம்’ என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.
அதேபோல், தொழிற்சாலையில் ஆராய்ச்சி, புதுமையை உருவாக்குதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் பிரிவில் சென்னை ஐ.ஐ.டி. 97.6 மதிப்பெண்ணுடன் 16-வது இடம் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில் 301 முதல் 400 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளது.
இந்த தரவரிசை பட்டியலை கடந்த டிசம்பர் மாதம் வரை பல்கலைக்கழகங்களிடம் இருந்து பெற்ற தரவுகளின் அடிப்படையிலும், அதனை சரிபார்த்த பின்னரும் டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், டைம்ஸ் நிறுவனம் வெளியிடும் உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படாததால், அதை புறக்கணிப்பதாக சென்னை ஐ.ஐ.டி., டெல்லி, காரக்பூர் உள்ளிட்ட 7 ஐ.ஐ.டி.க்கள் சமீபத்தில் கூட்டாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!


No comments:
Post a Comment
Please Comment