தினம் ஒரு தகவல் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியும், மீண்ட வரலாறும்...
அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியும், மீண்ட வரலாறும்... அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. இதன் காரணமாக பங்குச்சந்தை 1932-ம் ஆண்டில் ஏறக்குறைய 89 சதவீதத்துக்கும் மேலாக சரிந்தது. பங்குச்சந்தை சரிவு என்பது பொருளாதார மந்த நிலையின் ஒரு பாதிப்பே தவிர, மந்த நிலையின் ஆரம்பம் அல்ல. 1929-ம் ஆண்டுக்கு முன்பே பொருளாதார மந்த நிலை தொடங்கி விட்டது.
1920-களில் அமெரிக்காவில் நுகர்வோர் கலாசாரம் உருவானது. இந்த கலாசாரம் அமெரிக்க தொழில்துறைக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம், ஆனால் பொருளாதாரத்துக்கு பாதகமாக அமைந்தது. பெரும்பாலான நுகர்வுகள் கடனில் இருந்தன. இதனால் பொருளாதார வளர்ச்சியில் நிச்சயமற்ற தன்மை உருவானது.
இதற்கிடையே அமெரிக்காவில் விவசாய பொருட்களின் விலையும் குறைந்துகொண்டே வந்தது. முதலாவது காரணம் உற்பத்தி அதிகரிப்பு. உலகப்போர் சமயத்தில் வீரர்களுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்வதற்கு விவசாயத்துறை விரிவடைந்தது. மேலும் இந்த விரிவாக்க நடவடிக்கைகளுக்கு எந்திரங்களை பயன்படுத்தி, வேளாண் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் உற்பத்தி அதிகமானது. பொருட்களின் விலை குறைந்தது. கடனில் எந்திரங்கள் வாங்கப்பட்டதால், விவசாயிகளுக்கு சுமை அதிகரித்தது. இதனால் பெரும்பாலானவர்கள் விவசாயத்தை கைவிட்டனர். இதுதவிர, 1920-ம் ஆண்டுகளில்தான் கார் உற்பத்தி தொடங்கியது.
இதையும் படியுங்கள்
அந்த வகையிலும் நுகர்வு அதிகரித்து வளர்ச்சி உருவானது. 1925-ம் ஆண்டு வாக்கில் கார் விற்பனையில் மந்த நிலை உருவானது. மேலும் கட்டுமானத்துறையிலும் மந்த நிலை உருவானது. பங்குச்சந்தை சரிந்ததால், பணக்காரர்களுக்கு பணம் மட்டுமே இழப்பு, ஆனால் தொழிலாளர்கள் வேலையை இழந்தனர். வேலையில்லா திண்டாட்டம் கடுமையாக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக இருந்தது. கிட்டத்தட்ட 1½ கோடி மக்கள் வேலை இல்லாமல் தவித்தார்கள்.
தவிர வங்கிகளுக்கு கடுமையான விதிமுறைகள் இல்லாததால் வங்கிகள் முதலீட்டாளர்களின் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தன. குறைவான பணம் மட்டுமே புழக்கத்தில் இருந்தது. இதனால் பணவாட்ட சூழ்நிலை உருவானது. அமெரிக்க பொருளாதாரம் சரிய சரிய, அதன் தொடர்ச்சியாக மற்ற உலக நாடுகளும் சிக்கலில் தவித்தன.
அப்போது இருந்த ‘பிக்சட் கரன்சி’ முறையும் அதற்கு ஒரு காரணம் ஆகும். முதல் உலகப்போரால் சிக்கலில் இருந்த பல ஐரோப்பிய நாடுகளுக்கு, இந்த பொருளாதார மந்த நிலை மேலும் நெருக்கடியை கொடுத்தது. பல ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அரசு உதவி செய்துகொண்டிருந்தது. அங்கேயே பிரச்சினை வந்ததால் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் கடன் குறைந்தது. குறிப்பாக இங்கிலாந்தும், ஜெர்மனியும் மிகவும் பாதிக்கப்பட்டன. ஜெர்மனியில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக இருந்தது.
இந்த மந்த நிலைமை அமெரிக்க அரசியலையும் மாற்றியது. 1929 முதல் அமெரிக்க அதிபராக இருந்தவர் ஹெர்பர்ட் ஹோவர். மந்த நிலை இருந்தாலும், அதனை சரியாக கணிக்கத் தவறியவராக இருந்தார். இதனால் 1932-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஹோவர் தோற்கடிக்கப்பட்டு ரூஸ்வெல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பொருளாதாரத்தை மீட்பதற்கு கடுமையாக நடவடிக்கைகள் எடுத்தார். நான்கு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை கொடுத்து, வங்கிகளை மீட்கும் நடவடிக்கைகளை எடுத்தார். அதன் பிறகு வங்கி சட்டம் இயற்றப்பட்டது.
சில மாதங்களுக்கு பிறகு திவாலான வங்கிகள் மீண்டும் செயல்பட தொடங்கின. நிலையை சீராக்குவதாக நேரடியாக மக்களிடம் பேசி நம்பிக்கையை உயர்த்தவும் செய்தார். அதற்கு பலனும் கிடைத்தது. அமெரிக்க பொருளாதாரமும் மெல்ல மீண்டு வந்தது.

No comments:
Post a Comment
Please Comment