தினம் ஒரு தகவல் - பனை பொருள் தொழிலுக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும்
சில்லுக்கருப்பட்டி, பலகாரம் முதல் அரிசி, தானியம் ஆகியவற்றை சேமித்து வைக்கப் பயன்பட்டவை பனை ஓலை பெட்டிகள். இவற்றுக்கு அளவை பொறுத்து பெட்டகம், கடகம், கொட்டான் என்ற பெயர்களும் உண்டு.
சில்லு கருப்பட்டிக்கு சாதாரண பனை ஓலை பெட்டிகள் என்றால், பலகாரம், தானியங்களை வைக்க இன்னும் தரமான வண்ண வண்ண பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. பனை ஓலைக்கே உள்ள தனி மணத்துடன் வசதியும் நிறைந்தவையாக இருக்கும் இந்த பெட்டிகள், கைவினை திறனால் அழகுபடுத்தப்பட்டவை.
தென் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பனைகள் அதிகம் உள்ளன. அப்பகுதிகளில் பனை ஓலைகளில் பெட்டி, கூடை, கொட்டான், அஞ்சறை பெட்டி, மிட்டாய் பெட்டி, பர்ஸ், விசிறி, முறம், தட்டு, கிலுகிலுப்பை, தொப்பி என விதவிதமான கைவினை பொருட்கள் செய்யப்பட்டு வருகின்றன.
பனை ஓலை பொருட்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். அத்துடன், மணப்பெண்ணுக்கான திருமண சீர்வரிசையில் சீதனமாக கொடுக்கப்படும் பலகாரங்களை ஓலை பெட்டிகளில் வைத்துக் கொடுப்பது பாரம்பரியமான நடைமுறை.
ராமேசுவரம், மதுரை, பழனி, திருச்செந்தூர் கோவில்களுக்கு வரும் பக்தர்களும், கன்னியாகுமரி, குற்றாலம், கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் பனை ஓலையால் செய்யப்பட்ட கைவினை பொருட்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதெல்லாம் இருந்தாலும், நாகரிக மோகம் காரணமாக பனை ஓலை கைவினை பொருட்கள் தற்போது மோசமான பின்னடைவை சந்தித்து வருகின்றன. பாரம்பரியமாக இந்த தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
ஏழைகளுக்கு வாழ்வளிக்கும் குடிசை தொழிலாக விளங்கிய பனை ஓலை தொழிலில், பின்தங்கிய பொருளாதார நிலை கொண்ட பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஈடுபட்டு வந்தனர். நாகரிக மோகம் என்ற பெயரில் இந்த பொருட்களின் இடத்தை பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றிவிட்டன. இதனால் பனை ஓலை தொழில் வேகமாக நலிந்து வருகிறது.
பனை ஓலையால் செய்யப்படும் கைவினை பொருட்களுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே பனை ஓலை கைவினை பொருட்களை செய்வதற்கு சுய உதவிக் குழு பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயல வேண்டும்.
பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து கையால் செய்யப்படும் ஓலை பெட்டிகளை அதிகம் பயன்படுத்தினால், நலிவடைந்துவரும் பனை பொருள் தொழிலுக்கு புத்துயிர் கிடைக்கும், சுற்றுச் சூழலும் சீர்கெடாமல் பாதுகாக்கப்படும், என்கிறார்கள் சுற்றுச்சூழல் வல்லுனர்கள்.

No comments:
Post a Comment
Please Comment