ஊரடங்கு காரணமாக
செல்போன், ஏ.சி., தொலைக்காட்சி பயன்பாடு அதிகரிப்பு
‘ஷாக்’ கொடுக்க காத்திருக்கும் மின்சார கட்டணம்
சென்னை, ஏப்.22-
ஊரடங்கு காரணமாக செல்போன், ஏ.சி., தொலைக்காட்சிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் மின்சார கட்டணம் பொதுமக்களுக்கு ‘ஷாக்’ அடிக்கும் வகையில் உயர வாய்ப்பு இருக்கிறது.
செல்போன், தொலைக்காட்சி
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். வீட்டுச் சிறையில் அகப்பட்டு கிடப்பவர்கள் பரமபதம், தாயம் உள்ளிட்டவை விளையாடி மகிழ்ந்தாலும், பெரும்பாலானவர்கள் பொழுதை போக்குவதற்கு செல்போன்கள், தொலைக்காட்சிகள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப் உள்ளிட்டவற்றை நம்பியே நாட்களை நகர்த்துகிறார்கள்.
காலையில் எழுந்ததும் செல்போன்களை கையில் எடுத்துக்கொண்டு சமூக ஊடகங்களில் உலாவும் மீம்ஸ்களை பார்த்து ரசிப்பது, பார்வர்டு செய்வது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, வீடியோ கால் அழைப்பு மூலம் நலம் விரும்பிகளிடம் பேசுவது என சிலர் ஊரடங்கை சமாளிக்கிறார்கள். அதே சமயத்தில் கேம் விளையாடுவதற்கும், ‘ரைம்ஸ்’ பார்ப்பதற்கும் செல்போன்கள் வேண்டும் என்று சுட்டிக் குழந்தைகளும் அடம் பிடிக்கிறார்கள். இதனால் பல வீடுகளில் செல்போன்களுக்கு நீயா-நானா? என்ற போட்டி நிலவி வருகிறது.
மின்சார கட்டணம் ‘ஷாக்’
சிலர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், படங்களையும் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். செல்போன்கள் சார்ஜ் இறங்கிய பின்னரும், உடனடியாக சார்ஜ் ஏற்றப்பட்டு மீண்டும், மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால், ஊரடங்கு காலகட்டம் முடிந்த பின்னர் பலருக்கு விரல் ரேகையே இருக்காது என்று சிலர் வேடிக்கையாக கூறி வருகிறார்கள். அதனை மெய்ப்பிக்கும் வகையில் செல்போன்களின் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. இதேபோல தொலைக்காட்சியும் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க கோடைகாலம் என்பதால் வெயிலை சமாளிக்க மின்விசிறிகள், ஏ.சி.கள், ஏர்கூலர்களும் ஓய்வு இல்லாமல் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. இதேபோல வீட்டில் இருந்து பலரும் வேலை செய்து வருவதால் கம்ப்யூட்டர், லேப்டாப்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால் வீடுகளில் மின்சார பயன்பாடு வழக்கத்தை விடவும் சுமார் 2 முதல் 3 மடங்கு உயர்வு அடைந்துள்ளது. இதை வைத்து பார்க்கும்போது இனி வரும் மின்சார கட்டணபில் பொதுமக்களுக்கு ‘ஷாக்‘ கொடுக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. அதேசமயத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருப்பதால் தொழிற்சாலைகளுக்கு மின்சார பயன்பாடு அறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டணம் ரத்து செய்யவேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் பலரும் கூறும்போது, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலகட்டத்தில் பொழுதை போக்குவதற்கு வேறு வழி இல்லாதால் செல்போன்களையும், தொலைக்காட்சிகளையும் சார்ந்து இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இதை தவிர வேறு என்ன செய்யமுடியும்? சார்ஜ் இறங்க, இறங்க ஏற்றப்பட்டு செல்போன் பயன்படுத்தி வருகிறோம். இதனால் வழக்கமாக வருவதை காட்டிலும் மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சூழலை கருத்தில் கொண்டு இந்த கட்டணத்தை அரசு ரத்து செய்யவேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் சலுகையாவது அளிக்கவேண்டும் என்றனர்.
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:
Post a Comment
Please Comment