உலக சுகாதார நாளான இன்று WHO பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உலக சுகாதார நாளான இன்று WHO பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்!

உலக சுகாதார நாளான இன்று WHO பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்! | #WorldHealthDay🌹💫

கரோனா வைரஸ் தடுப்பில் உலக சுகாதார அமைப்பின் பங்கு என்ன? எதற்காக உலக சுகாதார அமைப்பு உருவாக்கப்பட்டது? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கும் இந்த கட்டுரை.

WHO என்று அழைக்கப்படும் உலக சுகாதார அமைப்பு தொடங்கப்பட்ட தினமே உலக சுகாதார நாளாக உலக அளவில் கொண்டாடபடுகிறது. 1948, ஏப்ரல் 7ம் தேதி தொடங்கப்பட்டதுதான் உலக சுகாதார அமைப்பு. அபோதிலிருந்து இப்போது வரை என்ன செய்தது உலக சுகாதார அமைப்பு? போன்ற கேள்விகள் மக்கள் மனதில் எழும். 

உலக சுகாதார அமைப்பின் முக்கியமான பணி என்ன?

2009ம் ஆண்டில் ஏற்பட்ட பன்றிக் காய்ச்சல், 2014ம் ஆண்டு ஏற்பட்ட எபோலா வைரஸ் தாக்குதல் மற்றும் தற்போது கோரத்தாண்டவம் ஆடிவரும் கரோனா வைரஸ். இதுபோன்ற சுகாதார அவசரநிலை வருகிறபோது மட்டும் தான் மக்கள் மத்தியில் உலக சுகாதார அமைப்பு பற்றிய கவனமோ சிந்தனையோ ஏற்படும். ஆனால், உண்மையை சொல்லவேண்டுமானால், உலக சுகாதார அமைப்பின் பணி மிகவும் பெரியது.

உலகில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் சரியான மருத்துவம் கிடைக்கப்பெறவேண்டும் என்பதே உலக சுகாதார அமைப்பின் உண்மையான நோக்கம். உணவு மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்தில், எந்தெந்த நாடுகள் சுகாதாரமாகவும் நோய்த்தாக்கம் இல்லாமலும் இருக்கின்றன என்று உலக சுகாதார அமைப்பே தொடர்ந்து கண்காணித்துவரும். 194 நாடுகளை உறுப்பினராக கொண்ட உலக சுகாதார அமைப்பு, மருத்துவம் சார்ந்த மிகப்பெரிய ஆய்வுகளை செய்ய முடிவெடுக்கும்.

அதற்காக உருவாக்கப்பட்டது உலக சுகாதார அமைப்பு

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, உலக நாடுகளில் ஏற்படும் நோய்த்தொற்று மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை கண்காணிப்பதற்காக தனி அமைப்பு உருவாக்க முடிவு செய்தது ஐநா சபை. முதலில் 61 நாடுகளை மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட உலக சுகாதார அமைப்பு, தற்போது 194 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. இதன் தலைமை அலுவலகம், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் உள்ளது.

உலக சுகாதார அமைப்பிற்கு நிதி எவ்வாறு கிடைக்கிறது?


ஐநா சபை உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள் உலக சுகாதார அமைப்பிற்கு நிதி வழங்கும். சில நாடுகளால் அதிக தொகையை நிதியாக தர முடியாததால் வளர்ச்சியடைந்த நாடுகளில் இருந்து அதிக தொகை நிதியாக வசூலிக்கப்படும்.

இதுமட்டுமல்லாமல், சில அரசு சாரா அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உலக சுகாதார அமைப்பிற்கு நிதி வழங்குகின்றன. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள்தான் தற்போதுவரை அதிக நிதி தருபவைகளாக இருக்கின்றன.

கரோனா வைரஸை எப்படி எதிர்கொள்கிறது உலக சுகாதார அமைப்பு?

எய்ட்ஸ், கரோனா வைரஸ் போன்ற நோய்த்தொற்றுகள் ஏற்படுகையில் சர்வதேச அளவில் எடுக்கப்படவேண்டிய மிக முக்கிய முடிவுகளை உலக சுகாதார அமைப்பு எடுக்கும். தற்போது கரோனா வைரஸின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் அதற்கு மருந்து கண்டுபிடிப்பது, தடுப்பூசிகள் கண்டுபிடிப்பது போன்றவற்றில் உலக சுகாதார அமைப்பு முனைப்பு காட்டி வருகிறது. சமீபத்தில் கூட ஏற்கனவே உள்ள சில நோய்க்கான மருந்துகளை கரோனாவிற்கு ஏற்றதாக இருக்குமா என்று சோதனை செய்துபார்த்தது.


சுகாதார அவசரநிலை பிரகடனத்திலும் உலக சுகாதார அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதன்மூலம் மற்ற நாடுகளுக்கு நிதி உதவி அறிவிப்பது, ஊரடங்கு போன்ற முக்கிய முடிவுகளை கையாள்வது போன்றவற்றை உலக சுகாதார அமைப்பே செயல்படுத்தும்.

அதேபோல, அதன் உறுப்பினர் நாடுகளுக்காக மட்டும் சுகாதாரம் தொடர்பான கொள்கைகளை உலக சுகாதார அமைப்பு மாற்றிக்கொள்ளாது. உலக சுகாதாரமே அவர்களது மந்திரமாக இருப்பதால் அதனை காக்க உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து முயற்சித்தும் போராடியும் வருகிறது.

உலக சுகாதார அமைப்பு கற்ற பாடம்:

முந்தைய காலங்களில் உலக சுகாதார அமைப்பின் தீவிர செயல்பாடு உறுப்பினர் நாடுகள் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளை ஆச்சரியமடையவைத்தது, ஆனால், பன்றிக்காய்ச்சல் பரவியபோதோ அல்லது எபோலா வைரஸ் பரவியபோதோ உலக சுகாதார அமைப்பு அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை போன்ற விமர்சனங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதுபோன்று எந்த வைரஸ் தொற்றையும் கையாளக்கூடாது என்று தீர்மானம் செய்தது உலக சுகாதார அமைப்பு.

அதன்பின்னர், தற்போது உலக அளவில் பரவிவரும் தொற்றாக இருக்கும் கரோனா வைரஸை கையாள்வதில் உலக சுகாதார அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை போன்றவற்றை மிகச்சரியாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கிறது. நாடு வாரியாக கரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையை மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் இணையத்தில் பதிவேற்றம் செய்கிறது உலக சுகாதார அமைப்பு. 


கரோனா வைரஸ் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களது சந்தேகங்களுக்கு பதிலளிக்கவும் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பை மிகப்பெரிய மூலப்பொருளாக பயன்படுத்துகிறது.

அதே போல, மலேரியா, காச நோய் போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்துகளை கரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக பயன்படுத்தமுடியுமா என்று சோதனை செய்து மிக முக்கியமான மற்றும் கடினமான முடிவுகளை எடுத்து அதனை நிறைவேற்றுகிறது.

கரோனா வைரஸை பொறுத்தவரை, பெரும்பாலான மக்கள் மற்றும் நாட்டு அரசுகள் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைகளில் திருப்தி அடைந்ததாகவே தெரிகிறது. ஆனால், உயிரிழப்புகள் அதிக அளவில் இருப்பதால் கூடிய விரைவில் மருந்து கண்டுபிடிக்கவேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

No comments:

Post a Comment

Please Comment