“எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம்” - ThulirKalvi Blogs

Latest

Search This Site

“எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம்”

“எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம்” -சானியா சொல்லும் அறிவுரை 

உதவிகள் வேண்டப்படும் இந்த வேளையில், களத்தில் இறங்கியுள்ள சில பிரபலங்களில் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவும் ஒருவர். “நம்மைப் போன்றவர்கள் வாழ்வில் நல்லநிலையில் இருக்கும்போது, கடவுள் நமக்கு நிறையக் கொடுத்திருக்கும்போது, முடிந்த விதங்களில் எல்லாம் பிறருக்கு உதவுவது நம் கடமையல்லவா?” என்று கேட்கிறார் இவர். 

 “இந்த நெருக்கடியான நேரத்தில், உதவுவதற்காகப் பலரும் ஒன்றிணைந்துள்ளனர். நானும், எனது நண்பர்கள் மற்றும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமும் இணைந்து, இரண்டரைக் கோடி ரூபாய் திரட்டியுள்ளோம். வருமானமின்றி அவதிப்படும் எண்ணற்ற கூலித் தொழிலாளர்களுக்கு அன்றாட உணவுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்” என்று நல்ல தகவல் சொல்கிறார் சானியா. 

 இதுபோன்ற சமூக சேவைகளுடன், உடலும் மனமும் முடங்கிக் கிடக்கும் மக்களை, சமூக வலைதளம் மூலம் உற்சாகப்படுத்தவும் சானியா முயல்கிறார். தனது மகன் இஷானின் குறும்புத்தன வீடியோக்களை அவ்வப்போது வெளியிடுகிறார், கணவர் சோயிப் மாலிக்குக்குத் தெரிவிக்கும் வாழ்த்துகளைப் பகிர்கிறார். 

 “வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய நெருக்கடியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சமாளிக்கின்றனர். நானோ உடற்பயிற்சி செய்வது, மகன், குடும்பத்தினருடன் இருப்பது என்று நேரத்தைக் கடத்துகிறேன். இதுபோன்ற சூழலை எதிர்கொள்ள எனக்குள் உள்ள விளையாட்டு வீராங்கனை உதவுகிறாள்” என்பவர், கன்னாபின்னாவென்று பரவும் வதந்திகள் குறித்துக் கவனமாக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கவும் செய்கிறார். 

“அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வழிகள், உலக சுகாதார நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் தகவல்களையே நான் நம்புகிறேன்” என்று சொல்கிறார். ‘இப்போது நான் வீட்டில் சமைக்கிறேன்.. வீட்டை நானே சுத்தப்படுத்துகிறேன்’ என்று பிரபலங்கள் பலரும் ஏராளமான படங்களைப் பகிரும் நிலையில், அதுகுறித்துக் கருத்துக் கூறுவதை கவனமாகத் தவிர்க்கிறார், சானியா. 

 இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன்சிங்கும், யுவராஜ்சிங்கும் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடியின் அறக்கட்டளைக்கு உதவ முன்வந்தது தொடர்பான சர்ச்சைக்குள்ளும் சானியா செல்ல விரும்பவில்லை. கொரோனா வேளையில் யார் உதவுகிறார்கள், யார் உதவவில்லை என்று விமர்சிக்க விரும்பாத சானியா, அதேநேரம், தாங்கள் பிறருக்கு உதவுவதாக தகவல், படங்களை வெளியிடுபவர்கள், விளம்பரத்துக்காக அப்படிச் செய்யவில்லை என்று மட்டும் சொல்கிறார். 

 அதுகுறித்து சானியா, “நீங்கள் ஒரு பலரும் அறிந்த நபராக இருக்கும்போது, பிறருக்கு நல்ல ஊக்கத்தை ஏற்படுத்துவது முக்கியம். எனவே, உதவும் செயல்பாடுகளை விவாதப் பொருளாக்க வேண்டாம். இன்றைய சூழலில், எதிர்மறை எண்ணங்கள், பேச்சுகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது” என்று அழுத்தமாக அறிவுரை சொல்கிறார்.

No comments:

Post a Comment

Please Comment