மாற்றுத்திறனாளி தொகுப்பூதிய ஆசிரியருக்கு நிவாரணம்
திருவள்ளூர்:
நம் நாளிதழில் வெளியான செய்தியால், வருவாய் இல்லாமல் தவித்து வந்த மாற்றுத்திறனாளி தொகுப்பூதிய ஆசிரியருக்கு, மாவட்ட கலெக்டர் நிவாரணம் வழங்கி, 14 ஒன்றியங்களிலும், கொரோனா தொடர்பான ஓவியங்கள் வரைவதற்கு அனுமதி அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த, மாபூஸ்கான்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி ஆனந்தகுமார்.
ஒரு கை இழந்த அவர், சோழவரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்தார்.பள்ளி நேரம் தவிர்த்து, மீதமுள்ள நேரத்தில், சுவர் ஒவியம், பெயின்டிங் வேலை பார்த்து வந்தார். இந்த வருமானத்தில், மனைவி, இரு மகன்களை காப்பாற்றி வந்தார்.
இந்நிலையில், ஊரடங்கால் சம்பளம் மற்றும் வருமானம் இல்லாமல் தவித்து வந்தார். மேலும், வீட்டு வாடகை தர முடியாமல், ஓவிய ஆசிரியர் ஆனந்தகுமார் தவித்து வந்தார்.
இது குறித்தான செய்தி வெளியானதையடுத்து, திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி, ஆனந்தகுமாருக்கு, அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் நிவாரணம் வழங்கினார்.
மேலும், மாவட்டத்தில் உள்ள, 14 ஒன்றியங்களிலும், கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து, அதற்கான தொகையை, அந்தந்த ஒன்றிய அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
மேலும், 14 வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கும், கலெக்டர் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். இதற்கான ஆணையும், மாற்றுத்திறனாளி ஆனந்தகுமாரிடம் வழங்கினார்.'தினமலர்' செய்தி எதிரொலி
No comments:
Post a Comment
Please Comment