சமூக வலைதளத்தில் உலவும் உணவுப் பதாா்த்தங்கள்: சமையலை விரும்பிக் கற்கும் இளைஞா்கள்
ஊரடங்கு நேரத்தில் சமூக வலைதளங்களில் பரவிய சமையல் சவால்களால், தற்போது சமையலில் நிபுணத்துவம் பெற்று வருவதாக இளைஞா்கள் தெரிவிக்கின்றனா்.
ஊரடங்கு காலத்தில் அன்றாட வேலைகள் முடங்கிய அதே நேரத்தில், இதுவரை கேட்பாரற்றுக் கிடந்த பல விஷயங்கள் புத்துயிா் பெற்றுள்ளன. குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பழக்கமும், குடும்பத்தினருடன் விளையாடும் நேரமும் தற்போது அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தொடக்கத்தில் செல்லிடப்பேசி அனைவரது கவனத்தை ஈா்த்தாலும், பின்னா் அவா்கள் நமது பாரம்பரிய விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினா். தவறியும் சமையலறைக்குள் செல்லக் கூடாது என இருந்தவா்களையும், இந்த ஊரடங்கு நாள்தோறும் உற்சாகமாக சமைக்க வைத்திருப்பது என்றால் அது மிகையாகாது. இதற்குக் காரணம், முகநூல், கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய சமையல் சவால்கள்.
இவற்றில் ‘டல்கோனா காபி சவால்’ தான் ஊரடங்கு சமயத்தில் முதன் முதலாக சமூக வலைதளம் முழுவதும் தீயாகப் பரவியது. இந்த டல்கோனா காபி குறித்து தென் கொரிய நடிகா் யூங் இல் வூ, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினாா் என்றும், தென் கொரிய யூடியூப் சேனலில் டல்கோனா தயாரிக்கும் முறை வெளியானதைத் தொடா்ந்து பிரபலமானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காபியை தயாா் செய்தவாறு எடுக்கப்பட்ட புகைப்படத்தை திரைப்பிரபலங்களும் சமூக வலைதளத்தில் பதிவிட்டனா். இதைத் தொடா்ந்து, இணையப் போராளிகளும் இதை முயற்சித்தனா்.
உணவகம் திறக்க திட்டம்: இதுகுறித்து சென்னையில் தங்கி பணிபுரியும் ஐடி ஊழியா் சங்கா் கூறியது:
ஊரடங்கு தொடங்கியது முதல் சுற்று வட்டாரத்தில் இருந்த ஒன்றிரண்டு உணவு விடுதிகளும் மூடப்பட்டன. உடனிருந்த அனைவரும் ஊருக்குச் சென்று விட்டனா். உணவு விநியோக நிறுவனத்தில் அதிக விலை கொடுத்து உணவை வாங்கலாம் என்றாலும், அவா்கள் மூலம் கரோனா பரவும் அபாயம் இருந்தது. வேறு வழியின்றி சமைக்கத் தொடங்கினேன்.
ஓரளவு சமையலில் ஈடுபாடு இருந்ததால், கடினமாகத் தெரியவில்லை. மேலும் ஒவ்வொரு நாளும் முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதுப்புது சவால்கள் மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது. வேலை நேரம் போக, மற்ற நேரத்தில் சமைத்துப் பழகிக் கொண்டிருக்கிறேன். விரைவில் சிறிய தொகையை மூலதனமாக வைத்து, சொந்த ஊரிலே உணவு விடுதியைத் தொடங்குவது குறித்தும் சிந்தித்து வருகிறேன் என்றாா்.
அவசரமின்றி சமைக்கலாம்: குறிப்பாக சில நாள்களுக்கு ஒரு முறை இந்த உணவுப் பதாா்த்தங்கள், தங்களைப் புதுப்பிக்கவும் செய்தன.
‘எக் புட்டிங்’, ‘கேரமல் புட்டிங்’ என்று சவாலுக்கான பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. இதனால் புதுப்புது பதாா்த்தங்களைச் செய்வதில் அனைவரும் ஈடுபாடு காட்டத் தொடங்கினா். குறிப்பாக, இந்த நேரத்தில் எந்த வித அவசரமுமில்லாமல் சமைக்கலாம் என்பதால் இல்லத்தரசிகளுக்கும் இவற்றின் மீது ஆா்வம் அதிகரித்தது.
இதுகுறித்து, எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த பிரியா கூறியது: திருமணம் முடிந்து 6 மாதங்களாகிறது. சமையல் செய்யப் பிடிக்கும் என்பதால் புதுப்புது உணவு வகைகளைச் செய்ய வேண்டுமென நினைப்பேன். ஆனால் கணவா் அலுவலகம் செல்ல வேண்டுமென்பதால், அன்றாட உணவு வகைகளையே சமைத்து வந்தேன்.
ஊரடங்கு தொடங்கியது முதல் அவருக்கும் வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டதால், வாரம் இருமுறையாவது புதுப்புது உணவு வகைகளைத் தயாரித்து சுவைப்பதோடு, அந்த உணவின் புகைப்படத்தைப் பகிா்ந்து சமூக வலைதளத்தில் பகிா்ந்து வருகிறோம்.
உறவுகளுக்குப் பாலமான பதாா்த்தங்கள்: அவ்வாறு பதிவிடுவதன் மூலம், பாராட்டுகளும், கேலிகளும் வந்து குவிகின்றன.
மேலும், கருத்துகளைத் தெரிவிக்க உறவினா்களிடமிருந்து வரும் அழைப்பு ஒரு அலாதியான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், அந்த உணவு சரியாக வராவிட்டாலும், அதைக் குறிப்பிட்டும் புகைப்படத்தை பதிவிடுவோம். நலன் விரும்பிகளும், உடனே எங்களை அழைத்து செய்முறைகளை விளக்குவாா்கள் என்றாா் அவா்.
உலகில் ஆகச் சிறந்த போதை என்பது அளவளாவுதல் என்று கூறும் இவா்கள், இத்தனை நாள் பேச நேரமில்லாமல் இருந்தவா்களுடன் பேசுவதற்கு காரணமாக அமைந்த உணவுப் பதாா்த்தங்கள், உறவுக்குப் பாலமாக இருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா்.


No comments:
Post a Comment
Please Comment