ஊரடங்குப் படிப்புகள்: வேலை அளிக்கும் இணையப் பாதுகாப்பு
பத்து வருடங்களுக்கு
முன்பு, கணினித் துறையில் அனைவருக்கும் வேலை கிடைத்தது. இன்றைய நிலை அப்படியில்லை.
கணினித் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கே இன்று வேலை எளிதில் கிடைப்பதில்லை.
பட்டதாரிகளின் எண்ணிக்கை தேவையை மிஞ்சிவிட்ட இன்றைய காலத்தில், வேலை பெறுவதற்கு
வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது.
பட்டதாரிகள் தங்களைக் கூட்டத்திலிருந்து
தனித்துக் காட்ட வேண்டியது அவசியம். அவர்கள் பட்டப்படிப்புடன் சேர்த்து ஏதாவது ஒரு
குறிப்பிட்ட பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
கல்லூரிக்குக் கட்டணம் கட்டியே மாளவில்லை, இன்னும் செலவு செய்ய வேண்டுமா என்று
மலைக்க வேண்டாம். படிக்க வேண்டும் என்ற முனைப்பு மட்டும் இருந்தால் செலவு எதுவும்
செய்யாமலேயே உங்களால் படிக்க முடியும்.
என்ன படிக்கலாம்?
கணினித் துறை என்றவுடன்
பெரும்பாலோர் மென்பொருள் வடிவமைப்பிலும் புரோகிரமிங் லாங்க்வேஜ்களிலும் தங்களைச்
சுருக்கிக்கொள்கின்றனர். ஆனால், கணினி வடிவமைப்பு, ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை
நிறுவுதல், நெட்வொர்க் வடிவமைப்பு, தரவுகளைப் பாதுகாத்தல், இணையத்தில் பாதுகாப்பு
வளையத்தை ஏற்படுத்துதல் என்று அதன் எல்லைகளை விரிவாக்கிக்கொண்டே செல்லலாம். இதில்
தற்போது மிகுந்த தேவையும் ஆள் பற்றாக்குறையும் நிலவும் துறையாகத் திகழும் இணையப்
பாதுகாப்பைப் பற்றிப் படிக்கலாம்.
இணையப் பாதுகாப்பு
இணையத்தால் இணைக்கப்பட்டுள்ள
இன்றைய நவீன உலகில், உங்கள் தனிமையையும் அந்தரங்கத்தையும் தீர்மானிப்பது நீங்கள்
வசிக்கும் வீடோ அணிந்திருக்கும் உடையோ அல்ல. அவற்றைத் தீர்மானிப்பது இணையப்
பாதுகாப்புதான்.
உங்களுடைய தனிமையையும் அந்தரங்கத்தையும் குலைப்பது இப்போது மிகவும்
எளிது. உங்கள் கணினி வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலோ உங்கள் மின்னஞ்சலின், சமூக
வலைத்தளங்களின் கடவுச்சொல் திருடப்பட்டிருந்தாலோ உங்களுடைய தனிமையையும்
அந்தரங்கத்தையும் இழந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
ஆனால், இன்றும் பெரும்பாலோர்
போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலோ சோம்பேறித்தனத்தாலோ கணினிக்கும்
கைப்பேசிக்கும் எளிதான கடவுச் சொற்களையே பயன்படுத்துகின்றனர். உதாரணத்துக்கு 1234,
குழந்தையின் பெயர், மனைவியின் பெயர் போன்றவை.
இன்னும் சிலரோ கடவுச்சொல்லே
இல்லாமலும் அவற்றைப் பயன்படுத்துகின்றனர். இணையப் பாதுகாப்பு பற்றிய படிப்பு,
உங்கள் கணினிக்கு என்னென்ன ஆபத்து நேரச் சாத்தியமுள்ளது என்பதையும் அந்த ஆபத்துகளை
எப்படி எதிர்கொள்ளலாம் என்பதையும் கற்றுத் தரும். மேலும், இணையத்தில் உங்கள்
தரவுகளுக்கு இருக்கும் ஆபத்துகளையும் அந்தத் தரவுகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும்
கற்றுத் தரும்.
கற்றுத் தரப்படுபவை
முதலில் இணையப் பாதுகாப்பின் எல்லைகள், பின்பு
அங்கு இருக்கும் ஆபத்துகளின் வகைகள் கற்றுத் தரப்படும். இணையத்திலிருந்து உங்கள்
நெட்வொர்க் பாதுகாப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை எப்படி எதிர்கொள்வது
என்பதும் ஆபத்து நேராமல் அதை எப்படிக் கண்காணிக்க வேண்டும் என்பதும் கற்றுத்
தரப்படும். மேலும், கணினிக்குள் நுழைந்த வைரசை எப்படிக் களைய வேண்டும், அது
நுழையாமல் எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதும் கற்றுத் தரப்படும்.
முக்கியமாக
நீங்கள் உருவாக்கி இருக்கும் பாதுகாப்பு வளையக் கோட்டையில் இருக்கும் ஓட்டைகளை
எப்படி அறிவது என்பதும் அந்த ஓட்டைகளை எப்படி அடைப்பது என்பதும்கூடக் கற்றுத்
தரப்படும். எங்கே படிக்கலாம்? Edx எனும் இணைய வகுப்பறை (edx.org) மிகப் பிரபலமானது.
இதன் சிறப்பு என்னவென்றால் இங்கு அனைத்துப் பாடங்களும் இலவசமாகவே கற்றுத்
தரப்படுகின்றன. உங்கள் படிப்புக்கு அங்கீகாரச் சான்றிதழ் வேண்டும் என்று
விரும்பினால் மட்டுமே, அதற்குச் சிறு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஹார்வர்டு,
எம்.ஐ.டி. போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள்கூட இலவசக் கல்வியை இணைய வகுப்பில்
நடத்துகின்றன.
தேடி வரும் வேலை இணையப் பாதுகாப்பு பொறியாளருக்கான தேவை
வருங்காலத்தில் மிக அதிகமாக இருக்கும். இணையப் பாதுகாப்பு இப்போது மிகவும்
முக்கியத் துறையாக இருப்பதுடன் ஆள் பற்றாக்குறை காரணமாகச் சற்றுத்
தடுமாறிக்கொண்டும் உள்ளது. பொறியியல் படிக்கும்போதே இணையப் பாதுகாப்பில் கொஞ்சம்
நிபுணத்துவத்தை வளர்த்துக்கொண்டால், பட்டதாரியான பின் வேலையைத் தேடி நீங்கள் செல்ல
வேண்டாம், வேலை உங்களைத் தேடிவரும். ஊரடங்கைப் பயனுள்ளதாக மாற்றலாமே!
கரோனாவுக்குப்
பிந்தைய ஊரடங்கு, மாணவர்களின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது.
பள்ளிகளும் கல்லூரிகளும் மீண்டும் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. சும்மாவே
வீட்டிலிருப்பது மாணவர்களுக்குச் சலிப்பின் உச்சமாக மாறிவிட்டது.
ஆனால்,
உருப்படியாகச் செய்வதற்கு எதுவும் இல்லையென்றால்தானே இந்தச் சலிப்பும் அலுப்பும்
ஏற்படும். தரமான கல்வி இன்று இணையத்தின் வழியாக எளிதாகக் கிடைக்கும்போது, அதைப்
பயன்படுத்தி ஏன் இந்த ஊரடங்கைப் பயனுள்ளதாக மாற்றக் கூடாது?
No comments:
Post a Comment
Please Comment