வேலைக்கு செல்ல காத்திருக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ‘ஆன்-லைன்’ தேர்வு சென்னை ஐ.ஐ.டி. தீவிரம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வேலைக்கு செல்ல காத்திருக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ‘ஆன்-லைன்’ தேர்வு சென்னை ஐ.ஐ.டி. தீவிரம்

வேலைக்கு செல்ல காத்திருக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ‘ஆன்-லைன்’ தேர்வு சென்னை ஐ.ஐ.டி. தீவிரம் 



வேலைக்கு செல்ல காத்திருக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்-லைன் தேர்வு நடத்தும் முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

‘ஆன்-லைன்’ தேர்வு 


கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு இருக்கின்றன. இந்தநிலையில் ஐ.ஐ.டி.யில் இறுதியாண்டு படித்த மாணவர்களில் பலர் வளாக வேலைவாய்ப்புகளில் தேர்வாகி இருக்கின்றனர். அவர்கள் பணிக்கு சேரவேண்டும் என்றால் இறுதியாண்டு தேர்வு மதிப்பெண்ணையும், தரத்தையும்(கிரேடு) அவர்கள் தெரிவிப்பது அவசியம். அந்த வகையில் மாணவர்களிடம், நீங்கள் விரும்பினால் ஆய்வு கட்டுரைகளின் அடிப்படையில் தரத்தை வழங்குகிறோம் என்று சென்னை ஐ.ஐ.டி. கூறி இருக்கிறது. 

ஆனால் பெரும்பாலான மாணவர்கள் அதற்கு விருப்பம் தெரிவிக்காமல் ‘ஆன்-லைன்’ வகுப்புகளுக்கு உட்பட்டு, தேர்வை நடத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், அவர்களுக்கான வகுப்புகளை ஆன்-லைனிலேயே சென்னை ஐ.ஐ.டி. நடத்தி முடித்து இருப்பதாகவும், தேர்வை ஆன்-லைனில் நடத்தும் முயற்சியிலும் சென்னை ஐ.ஐ.டி. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

தரங்கள் வெளியிடப்படும் 


சென்னை ஐ.ஐ.டி.யில் 800 பி.டெக். மாணவர்களும், 550 எம்.டெக். மாணவர்களும், 150 எம்.பி.ஏ. மாணவர்களும், 140 எம்.எஸ்.சி. மாணவர்களும் பயின்று வருகின்றனர். மொத்தம் 1,640 மாணவர்களில் கடந்த நவம்பர் மாதத்தில் சேர்ந்த 43 பேரை தவிர, மற்ற அனைவருக்கும் வாய்மொழி தேர்வையும்(விவோ வோஸ்), இறுதியாண்டு திட்டங்கள் (பிராஜெக்ட்) மற்றும் அதற்கான விளக்க காட்சிகளை சமர்ப்பிப்பதையும் ஆன்-லைனிலேயே சென்னை ஐ.ஐ.டி. நடத்துகிறது. சென்னை ஐ.ஐ.டி. ஆன்-லைன் வாய்மொழி தேர்வை வருகிற 15-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், வழக்கமாக ஜூலை மாதம் 2-வது வாரத்தில் அவர்களின் தரங்கள் வெளியிடப்படும். இந்த ஆண்டு அதற்கு முன்னதாகவே தரங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தேர்வு மையங்கள் 


மேலும், கொரோனா நோய்த்தொற்று தாக்கம் தொடர்பாக ஊரடங்கு நீடிக்குமானால், மற்ற மாணவர்களுக்கும் ஆன்-லைனில் தேர்வு நடத்த சென்னை ஐ.ஐ.டி. முடிவு செய்து இருக்கிறது. இதற்காக அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே தேர்வு மையங்கள் அமைக்க திட்டமிட்டு வருகின்றனர். சென்னை ஐ.ஐ.டி. ஆன்-லைனில் தேர்வு நடத்த முயன்று வரும் நிலையில், ஐ.ஐ.டி. மும்பை, ரூர்கே, கான்பூர், கோரக்பூர் ஆகியவை இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி தேர்வை நடத்தாமல், முந்தைய தேர்வுகளின் அடிப்படையிலேயே மதிப்பெண் வழங்குவது என முடிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Please Comment