முன்னெழுத்தும், கையொப்பமும் தமிழில் இடவேண்டும் அரசு உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

முன்னெழுத்தும், கையொப்பமும் தமிழில் இடவேண்டும் அரசு உத்தரவு

தமிழகத்தில் முதல்-அமைச்சர் முதல் கடைநிலை ஊழியர் வரை அரசு ஆவணங்களில் முன்னெழுத்தையும், கையொப்பத்தையும் தமிழில் இடவேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. 
 
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- அமைச்சர் அறிவிப்பு தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் (இனிஷியல்) தமிழிலேயே எழுதும் நடைமுறையைப் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என 2021-22-ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையின்போது தொழில்துறை அமைச்சர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழ் வளர்ச்சி இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், 1956-ம் ஆண்டு இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட தமிழ் ஆட்சிமொழி சட்டத்தின் முதன்மைப் பணியாக அரசு அலுவலர்கள், பணியாளார்கள் அனைவரும் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று 21.6.1978 அன்று ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், தங்கள் பெயர்களின் தலைப்பெழுத்துகளை (தந்தை, தாய், ஊர் பெயர்களின் இனிஷியல்), தங்களின் பெயர்களுக்கும் முன் தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என்று 16.9.1998 அன்று உத்தரவிடப்பட்டது. ஆனால் கையெழுத்து, முன்னெழுத்து ஆகியவற்றை தமிழில் எழுத வேண்டும் என்ற உத்தரவு முழுமையாக பின்பற்றப்படுவது இல்லை. மாணவர்களுக்கும் அறிவுறுத்தல் எனவே முன்பு பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின்படியும், தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையிலும், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு ஊழியர்களும் அனைத்து இனங்களிலும் தங்களின் பெயரை எழுதும்போதும், கையொப்பமிடும் போதும் முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும் என்று வலியுறுத்தி மீண்டும் ஆணை பிறப்பிக்கலாம் என்று கடிதத்தில் தமிழ் வளர்ச்சி இயக்குனர் குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும் அவர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே, தமிழில் பெயர் எழுதும்போது அதன் முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை கொண்டு வரவேண்டும். இதற்காக, மாணவர்கள் விண்ணப்பிக்கும் போதும், பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து சான்றிதழ் பெறும்போதும் முன்னெழுத்துடன் கையொப்பத்தை தமிழில் எழுதினால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் என்ற நடைமுறையை கொண்டு வரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டு உள்ளார். உடனடியாக அமல் தமிழ் வளர்ச்சி இயக்குனரின் இந்த கருத்துருவை அரசு ஏற்கிறது. 
 
அதற்கு ஏற்றபடி ஆணை பிறப்பிக்கிறது. அதன்படி, முதல்-அமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அரசு அலுவலர்கள் தமிழிலேயே கையொப்பமிடவும், முன்னெழுத்தை தமிழிலேயே எழுதவும் வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன. மாணவர்கள் கையொப்பமிடும் அனைத்து சூழ்நிலைகளிலும் தமிழ் முன்னெழுத்துடன் கையொப்பமிட அறிவுறுத்தப்படுகிறது. தலைமைச் செயலகம் முதல் கடைநிலை அரசு அலுவலகம் வரை அனைத்து அரசு துறைகளிலும் வெளியிடப்படும் ஆணைகள், ஆவணங்களில், பொதுமக்களின் பெயரை குறிப்பிடும்போது முன்னெழுத்துகள் உள்பட பெயர் முழுவதையும் தமிழிலேயே பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. 
 
அரசிடம் அளிக்கும் விண்ணப்பங்களிலும் மக்கள் இதையே பின்பற்ற வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்களுக்கு தெரியும் வகையில், தமிழின் பெருமை, முன்னெழுத்தையும், கையொப்பத்தையும் தமிழில் இடுவதில் உள்ள பெருமிதம் ஆகியவற்றை சுவரொட்டிகள் அமைத்து தெரியப்படுத்த வேண்டும். உடனடியாக இது அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment