பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக புதுமை; 6 தடுப்பு துணிப்பை விற்பனை
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில், பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளின் பயன்பாட்டை தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், ஆறு தடுப்புகள் கொண்ட துணிப்பையை, வீடுகள் தோறும், பேரூராட்சி நிர்வாகம் விற்பனை செய்கிறது.
சுற்றுச்சூழலை மாசு படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். எனினும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர, குறைந்த பாடில்லை.சுற்றுச்சூழலை மேம்படுத்த, வித்தியாசமான பல முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும், உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகம், எளிதில் மக்கக்கூடிய துணிப்பையை, வீடுகள் தோறும் விற்பனை செய்கிறது.
சாதாரண துணிப்பையாக இல்லாமல், உட்புறம், ஆறு தடுப்புகளுடன் கூடிய இந்த பையை, பொதுமக்களும் ஆர்வமாக வாங்குகின்றனர்.
விலை ரூ.75
இந்த துணி பையில், கீரை, காய்கறிகள்,பழ வகைகளை தனித் தனியாக வைக்க வசதிஉள்ளது. இதனால், வழக்கமாக காய்கறிகள்,பழங்களை ஒன்றாக போடும் நிலைமாறுகிறது.ஒவ்வொரு தடுப்பிலும், ஒவ்வொரு காய்கறிகளை வைத்து, நசுங்காமல், அடிபடாமல் வாங்கிச் செல்லலாம்.
அதிகபட்சம், 15 கிலோ காய்கறிகள், பழங்களை இந்த பையில் வாங்கலாம். இதன் விலை, 75 ரூபாய்.ஒரு முறை வாங்கினால், சில ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும். மகளிர் குழுவினர் மூலம், வீடு தோறும் விற்பனை செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment
Please Comment