கோவையில் உலகத் தமிழ் இணைய மாநாடு: ஜூலை 6-ஆம் தேதி தொடங்குகிறது
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தம்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் 17ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு, பல்கலைக்கழக வளாகத்தில் ஜூலை 6ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
17ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு, அறிவுசார் தமிழ்த் தேடுபொறிகள்' என்ற தலைப்பில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடு, ஆய்வரங்கம், மக்கள் அரங்கம், கண்காட்சி அரங்கம் என்ற மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது. கண்காட்சியின் ஆய்வரங்கில், இயல்மொழி பகுப்பாய்வு, இயந்திர மொழிபெயர்ப்பு, பேச்சு- எழுத்து பகுப்பாய்வு, தேடுபொறி, மின்னகராதி அமைத்தல், கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடு, செயலிகளைத் தரப்படுத்துதல், இணையவழி தமிழ்க் கல்வி, இணைய பாதுகாப்பு, தொழில்நுட்ப யுகத்தில் தமிழ் வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 70க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
மக்கள் அரங்கில், பொருள்களின் இணையம், பைதான், ரோபோடிக் தொழில்நுட்பம், 3 டி பிரின்டிங் தொழில்நுட்பம், குறுஞ்செயலி உருவாக்கம், மொழியியல், மேகக் கணிமை தொழில்நுட்பம், வலைப்பதிவு உருவாக்கம் உள்ளிட்ட பயிற்சிகள் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளன.
கண்காட்சி அரங்கில், மாணவர்கள், பொதுமக்களுக்கான பலகைக் கணினி முதல் அனைத்துக் கருவிகளும் தமிழ்க் கருப்பொருளுடன் விற்பனை செய்யப்பட உள்ளன. மேலும் தமிழ் கற்க உதவும் ஒலிக் குறுவட்டுகள், காணொலிக் குறுவட்டுகள், தமிழ் நூல்கள், கணினித் தமிழ் வளர்ச்சி குறித்த நூல்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட உள்ளன.
இந்த மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட கணினி வல்லுநர்கள் பேராளர்களாக வருகை தர உள்ளனர். தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித் துறை செயலர் த.உதயசந்திரன் சிறப்புரையாற்றுகிறார். விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாகி மு.பொன்னவைக்கோ, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் இணைத் தாளாளர் சங்கர் வாணவராயர் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
மாநாட்டு நிகழ்ச்சிகள் குழுத் தலைவர் கு.கல்யாணசுந்தரம், அறிவுசார் தமிழ்த் தேடுபொறிகள்' என்ற தலைப்பில் மாநாட்டு மைய உரையாற்றுகிறார். கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் கணினி மொழியியலின் சிறப்பு வளர்ச்சி' என்ற தலைப்பில் கருத்துரை வழங்குகிறார்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் கு.ராமசாமி முதன்மை உரையாற்றுகிறார். முதுநிலைக் கல்வி புல முதன்மையர் உ.சிவகுமார் நன்றி கூறுகிறார். இந்த மாநாட்டையொட்டி பொதுமக்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு,, பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment
Please Comment