மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த சாலை பாதுகாப்பு குறித்த பாடம் பள்ளி புத்தகங்களில் சேர்ப்பு
* போக்குவரத்து துறை ஏற்பாடு
* மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது
தமிழக பள்ளி பாட புத்தகத்தில் முதல்முறையாக சாலை பாதுகாப்பு குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்தாண்டு 16,157 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழகத்தில் முதல் முறையாக பள்ளி பாடப்புத்தகத்தில் 'சாலை பாதுகாப்பு விதிகள்' குறித்த பாடப்பகுதியை சேர்க்க போக்குவரத்து அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர். இந்த நிலையில், இந்த வருடம் முதல்கட்டமாக புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1, 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளில் 2ம் பருவத்தில் சாலை பாதுகாப்பு குறித்த பாடத்தை சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இதுகுறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று வெளியிடப்பட்ட போக்குவரத்து துறை கொள்ளை விளக்க குறிப்பில், பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு குறித்த பாடம் 1 முதல் 12ம் வகுப்பு வரைவுள்ள பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தாண்டு முதல்கட்டமாக 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளில் சாலை பாதுகாப்பு பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:மாணவர்கள் விபத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள, சாலை பாதுகாப்பு விதிகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும். அதனடிப்படையில், பள்ளி பாட புத்தகங்களில் ஏற்கனவே சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் உள்ளன. ஆனால், முதல் முறையாக சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து முழு விவரங்களும் தனி பாடமாக இந்தாண்டு சேர்க்கப்பட்டுள்ளது. அதில், என்னென்ன சாலை விதிகள் உள்ளன, அவற்றை எப்படி கடைப்பிடிக்க வேண்டும், போக்குவரத்து சிக்னல்களில் ஒவ்வொரு நிறமும் எவற்றை குறிக்கும், பள்ளிக்கு நடந்து செல்லும்போது சாலையில் எந்த புறமாக நடக்க வேண்டும், சாலையை கடக்கும் முன் என்ன செய்ய வேண்டும் என்பது உள்பட பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. பெயரளவில் சேர்த்தால் மாணவர்கள் படிக்கமாட்டார்கள் என்பதற்காக, சாலை பாதுகாப்பு பாடத்துக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றார்.இந்தாண்டு முதல்கட்டமாக 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளில் சாலை பாதுகாப்பு பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment