நவீன தொழில்நுட்பம் மூலம் பஸ் வருகை நேரத்தை பயணிகள் அறிந்து கொள்ளும் வசதி
போக்குவரத்துத் துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்பு:
* தமிழகத்தின் அனைத்து தரப்பினரின் நலனுக்காக மாநில அளவில் மேம்படுத்தப்பட்ட நிலையான இயக்க கொள்கை உருவாக்கப்படும். * சென்னையில் மின்கலன் அல்லது மின்சாரத்தில் ஓடும் பேருந்துகள் இயக்குவதற்கான விரிவான திட்டம் செயல்படுத்தப்படும்.
* நவீன தொழில்நுட்ப வசதி மூலம், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும், பேருந்து வருகை நேரத்தினை பயணிகள் அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.
* மேலை நாடுகளில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ள (ஹப், ஸ்போக்) செயல் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
* வணிக வளாகம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதன் மூலம் பணிமனைகளை நவீனமயமாக்கி வருவாய் ஈட்டப்படும்.
* முக்கிய பேருந்து நிலையங்களில் பெரிய அளவிலான மின்னணு ஒளித்திரை தகவல் பலகை அமைக்கப்படும்.
* பேருந்துகளில் நவீன பின்நோக்குக் கண்ணாடிகள் பொருத்தப்படும்.
* அம்மா அரசு நடமாடும் பணிமனை ஏற்படுத்தப்படும்.
அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா போக்குவரத்து துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியிருப்பதாவது: சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 100 சிற்றுந்துகளை கூடுதலாக இயக்க திட்டமிட்டுள்ளது. 70 மின்சார பேருந்துகளை வாங்கும் ஒரு விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசின் கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக ரூ140 கோடியில், 105 கோடியினை மத்திய அரசும், ₹35 கோடி தமிழக அரசும் வழங்கிட உள்ளன. மேலும் உள்கட்டமைப்பிற்காக ரூ15 கோடி மத்திய அரசு முழுவதுமாக வழங்க உள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தால் படுக்கை வசதியுடன் கூடிய 40 குளிர்சாதன பேருந்துகள் விரைவில் இயக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் படிப்படியாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.
No comments:
Post a Comment
Please Comment