ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் தருண் அய்யாச்சாமிக்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இன்று எடப்பாடி பழனிச்சாமி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
18வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஆடவருக்கான தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தமைக்காக தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக அரசு சார்பிலும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவருக்கான 4x400 ரிலே போட்டியிலும், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியிலும் தங்க பதக்கங்களை வென்று பெருமை சேர்த்ததை நினைவுகூர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகையாக, கடந்த 2011 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.30 லட்சமாக உயர்த்தி அறிவித்தார். அதன்படி, ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை பெற நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள்.
உங்களையும், உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் வாழ்த்துகிறேன். வருங்காலத்திலும் இத்தகைய சாதனைகள் பல படைத்திட வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் தனது, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment