வீடு வீடாக சென்று மாணவர்களை அரசு பள்ளியில் சேர்த்தேன் என்று கோவையில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஸதி பேட்டி அளித்துள்ளார்.
நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டோ சேவை அடிப்படையில் தமிழகத்தில் இருந்து 6 பேர் மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருதுக்கான நேர்காணலுக்கு மாநில அரசு பரிந்துரை செய்தது. இதில்t கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ஆர்.ஸதி என்பவர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறுகையில் 23 ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2009-ஆம் ஆண்டு பணி உயர்வு பெற்று மலுமிச்சம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளேன்.
இப்பள்ளி நான் சேர்ந்தபோது வெறும் 145 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் மாணவர் சேர்க்கைக்காக வீடு வீடாக சென்று அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், கல்வி கற்பதால் ஏற்படும் நன்மைகள் ஆகியன குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினேன்.
இதனால் அதிகரித்த மாணவர் சேர்க்கையால் தற்போது 270 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக இப்பள்ளியில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு 2016-ம் ஆண்டு கோவை மாவட்ட கலெக்டரிடம் விருது பெற்றேன். இதே பள்ளிக்கு தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவித்தது.
மலுமிச்சம்பட்டி ஊராட்சியை 'திறந்த வெளியில் மலம் கழிப்பிடமற்ற ஊராட்சியாக' மாற்ற இப்பள்ளி மாணவர்கள் பெரும் பங்காற்றினர். இதற்காக 10 மாணவர்களுக்கும், எனக்கும் இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மாவட்ட கலெக்டர் விருது வழங்கி பாராட்டினார்.
இதன் தொடர்ச்சியாக எனக்கு நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது. இதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விருதை அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் என்றார் அவர்.
No comments:
Post a Comment
Please Comment