மாணவிகள் பள்ளிக்கு செல்லும்போது ஏற்படும் இடையூறுகள் குறித்து தகவல் தெரிவிக்க 14417 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த ஆண்டு 20 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழாண்டு நீட் தேர்விற்காக 412 மையங்கள் ஏற்படுத்தப்படும். கடந்த ஆண்டைவிட, நிகழாண்டு நீட் தேர்வில் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவிகள் பள்ளிக்கு செல்லும்போது ஏற்படும் இடையூறுகள் குறித்து தகவல் தெரிவிக்க 14417 என்ற இலவச தொலைபேசி எண் பள்ளிக் கல்வித் துறையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தெரிவித்தவர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும்.
கல்வித்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுகளை அறிவிக்கும் வரை காலியாக உள்ள 1952 காலிப்பணியிடங்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.
ஆய்வின்போது, முன்னாள் அமைச்சர் சிவபதி, முன்னாள் எம்எல்ஏ ராம. ராமநாதன், கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் பாப்பம்மாள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment
Please Comment