புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர்


புறாவுக்காக லாரியை இயக்காத உரிமையாளர்


வருவாயை இழந்தாலும் குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரை காத்திருப்பேன்.   

             
திருவாரூரில் தனது லாரியில் முட்டையிட்டு இருந்த புறா, குஞ்சு பொரிப்பதற்காக லாரியை அதன் உரிமையாளர் இயக்காமல் உள்ளார். தனக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, குஞ்சுகள் சிறகடித்து பறக்கும் வரையில் காத்திருப்பேன் என்கிறார்.





திருவாரூர் சேந்தமங்கலம் காவிரி நகரை சேர்ந்தவர் சோர்ந்தவர் சிங்காரவேலு. இவர் லாரிகள் வைத்து மணல், ஜல்லி வியாபாரம் செய்து வருகிறார். தற்போது ‘ஆன்லைன்’ மூலம் மணல் எடுப்பதால் சுழற்சி முறையில் இவருக்கு மணல் எடுக்க அனுமதி கிடைப்பதில் கால தாமதமானது. இதனால் கடந்த மாதம் 13-ந் தேதி தனக்கு சொந்தமான லாரி ஒன்றை வீட்டின் அருகில் உள்ள சுப்பம்மாள் நகரில் உள்ள சேமிப்பு கிடங்கு பகுதியில் நிறுத்தி வைத்து இருந்தார்.




இந்த நிலையில் லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 நாட்களுக்கு பின்னர் அதாவது 18-ந் தேதி இவருக்கு மணல் எடுப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து லாரியை எடுப்பதற்காக டிரைவர் சென்றுள்ளார். அப்போது லாரியின் டீசல் டேங்க் அருகில் ஏர் பில்டர் மேல் பாதுகாப்பு கம்பி வளையத்தில் ஒரு புறா 2 முட்டைகளை இட்டு இருப்பதை பார்த்துள்ளார். இது குறித்து டிரைவர், லாரி உரிமையாளர் சிங்கார வேலுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்த சிங்காரவேலு, லாரி நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது புறா, அழகாக கட்டியிருந்த கூட்டில் முட்டைகள் இருப்பதை பார்த்தார். இதனையடுத்து லாரியை இயக்க வேண்டாம் என டிரைவரிடம் கூறினார். இந்த சம்பவம் நடந்து கொண்டு இருந்தபோது இரை தேடிச்சென்ற புறா, முட்டைகளை அடை காப்பதற்காக லாரியை சுற்றி, சுற்றி வந்தது.



இதனை கண்டதும் நெகிழ்ச்சியடைந்த சிங்காரவேலு, லாரியால் கிடைக்கும் வருமானம் தனக்கு பெரிதல்ல என்று முடிவு செய்து டிரைவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். தினமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை போய் பார்த்து புறாவின் முட்டை பாதுகாப்பாக உள்ளதா என கண்காணித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முட்டை உடைந்து குஞ்சுகள் வெளியில் வந்தது. கண் திறக்காமல் இருந்த அந்த புறா குஞ்சுகளை பாாத்து சிங்காரவேலு மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். தற்போது அந்த குஞ்சுகள் கொஞ்சம், கொஞ்சமாக கண் விழித்து வருகிறது.
இதுகுறித்து லாரி உரிமையாளர் சிங்காரவேலு கூறுகையில், உயிர் பிறப்பு என்பது இறைவன் கொடுத்த வரம். அவ்வாறுதான் புறா குஞ்சுகளை நான் பார்க்கிறேன். அதனால் தான் எனக்கு ஆயிரக்கணக்கில் வருமானம் பாதிக்கப்பட்டாலும் கூட பரவாயில்லை. புறா குஞ்சுகள் இறக்கை முளைத்து பறந்து செல்லும் வரை லாரியை எடுக்காமல் காத்திருக்க போகிறேன். வருமானத்்தை விட இது எனக்கு அதிகமான மகிழ்ச்சியை அளிக்கிறது என்பது தான் உண்மை என தெரிவி்த்தார்.



கடை ஏழு வள்ளல்களில் பேகன் என்பவர் குளிருக்கு நடுங்கிய மயிலுக்கு போர்வை கொடுத்ததாக வரலாறு. அந்த வழியில் புறாவிற்காக தனது லாரியை இயக்காமல் இருக்கும் சிங்காரவேலுவின் மனிதநேயத்தை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

No comments:

Post a Comment

Please Comment