மெட்ராஸ் சென்னையாக மாறி நவீன நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துவிட்டாலும், சென்னையின் வீதிகளில் இன்றும் பழமையின் சுவடுகள் அழுத்தமாகப் படிந்திருக்கின்றன. சென்னை நகருக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. கி.பி. 1-ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் ஒரு முக்கிய இடமாக இருந்தது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் கடற்கரை மூலம் இங்கு வந்தடைந்தனர். மக்களின் வாழ்வும் வரலாறும் ஒன்று சேர்ந்த சென்னையின் முக்கிய இடங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாமா.
ஜார்ஜ் டவுண் (ஏழு கிணறு)
1640-ம் ஆண்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. பிரமாண்டமான கோட்டையைச் சுற்றி ஆங்கிலேயர்கள் குடியேறிய பகுதி வெள்ளைப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது.கோட்டையின் வெளியே தெலுங்கு பேசும் ஆந்திர நெசவாளர்கள் பெரும்பான்மையாக குடியேறினார்கள். இந்தப் பகுதி கறுப்புப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது. இதுதான் பின்னர் ஜார்ஜ் டவுன் ஆனது.
வெள்ளையர்களின் ஆட்சியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க 1772-ம் ஆண்டு நகரத்தின் முதல் குடிநீர் திட்டமான ஏழுகிணறு திட்டம் ஆரம்பமானது. இப்போதுள்ள மின்ட் பகுதியில் ஏழு கிணறுகள் தோண்டப்பட்டன. அதிலிருந்து கோட்டைக்கும், கோட்டைக்கு வெளியில் வசித்த மக்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
வண்ணாரப்பேட்டை
தமிழகத்தில் விளைந்த பருத்தியிலிருந்து நூல் எடுப்பதும், அவுரி செடி பயிரிட்டு அதில் இருந்து சாயம் தயாரிப்பதும்தான் கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மையான தொழிலாக இருந்தது. இதனால், இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான நெசவாளர்கள் சென்னையில் குடியமர்த்தப்பட்டனர். நெசவாளர்கள் குடியேறிய பகுதிகள்தான் சிந்தாதரிப்பேட்டையும் வண்ணாரப்பேட்டையுமாகும்.
சேத்துப்பட்டு
சென்னையில் சிவப்பு நிறத்தில் ஏராளமான பழங்கால கட்டடங்கள் இன்றும் இருக்கின்றன. உயர்நீதிமன்றம், சட்டக் கல்லூரி, கவின்கலைக் கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் என பல கட்டடங்கள் இந்நகரின் பழம்பெருமையை சொல்கின்றன. தாட்டிகொண்ட நம்பெருமாள் செட்டியார்தான் செந்நிற கட்டடங்கள் அனைத்தையும் கட்டியவர். ஆங்கிலேயர் காலத்தில் புகழ்பெற்ற பில்டிங் காண்ட்ராக்டராக இருந்தவர். கட்டடக் கலையில் தனிப்பட்ட ஆர்வம் கொண்டிருந்தார். பெரும் செல்வந்தராகவும் இருந்தார். இவர் வாழ்ந்த வீடு, 'வெள்ளை மாளிகை' என்ற பெயரில், சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில் மேத்தா மருத்துவமனையின் பின்புறம் உள்ளது.
மூன்று மாடிகள், 30 அறைகள் கொண்ட இந்த மாளிகை தற்போது, அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து ஹாரிங்டன் சாலை வரை உள்ள நிலப்பரப்பு இவருக்கு சொந்தமாக இருந்தது. அதனால், அதை மக்கள் 'செட்டியார் பேட்டை' எனவும், ஆங்கிலேயர்கள் 'செட்டியார்பேட்' எனவும் அழைத்தன. பின்னர், செட்டிபேட் ஆகி, இப்போது 'சேத்துப்பட்டு' ஆகிவிட்டது.
ஆங்கிலேயர்கள் பலருக்கு வீடு கட்டி தந்த நம்பெருமாள் செட்டியார், தன் சொந்த பயன்பாட்டுக்கு நான்கு பெட்டிகள் கொண்ட தனி ரயிலே வைத்திருந்தார். சென்ட்ரல் நிலையம்தான் இவர் ரயிலை நிறுத்தி வைக்கும் இடம். திருவள்ளூரில் ஒரு கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவதற்கு மட்டும் இந்த ரயிலை பயன்படுத்துவாராம்.
பல்லாவரச் சந்தை
சென்னை வரலாற்றில் நிச்சயம் பல்லாவரம் சந்தைக்கும் ஓர் இடமுண்டு. 1815 ல் மாட்டுச் சந்தையாக தன் அடையாளத்தை தொடங்கிய பல்லாவரம் சந்தை இன்று மல்டி ஸ்பெஷாலிட்டி மார்கெட்டாக விளங்கி வருகிறது. சந்தை என்ற சொல்லுக்கு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கி 200 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது பல்லாவரம் சந்தை.
ஸ்டேன்லி மருத்துவமனை
ஆங்கிலேயர்களுக்கு வணிகம் செய்ய வந்த இடத்தில் அரசாளும் வாய்ப்பு கிடைத்தது பல்லாயிரக்கணக்கான ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வரத்தொடங்கினர். அவர்கள் படிப்பதற்குத் தேவையான கல்லூரிகள், குடியிருப்புகள், தேவாலயங்கள், சாலைகள் எல்லாவற்றையும் அமைத்துக்கொண்டார்கள். செயிண்ட் சார்ஜ் கோட்டையின் உள்ளேயே மருத்துவர்களையும் நியமித்தனர். கோட்டைக்கு வெளியில் இருக்கும் கறுப்பர் நகரத்து மக்கள் நாட்டு மருத்துவர்களை மட்டுமே நம்பியிருந்த நிலையில், அவர்களுக்காக ஆங்கிலேயர்கள் உருவாக்கியதுதான் ஸ்டேன்லி மருத்துவமனை. மிகச் சிறிய அளவில் மருத்துவமனையும், தொழுநோயாளிகளுக்கான இல்லமும் தொடங்கப்பட்டு, பின்னர் சென்னை மாநகரின் முதல் நவீன மருத்துவனையாக உருவெடுத்தது. மோசமாக பஞ்சம் தலைவிரித்தாடிய அந்நாட்களில் மக்களை சாவில் இருந்து காக்க இந்த இடத்தில் கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது. பின்னர் அதே இடத்தில்தான் மருத்துவமனையும் கட்டப்பட்டது. இதனால், ஸ்டான்லி மருத்துவமனையை கஞ்சித்தொட்டி ஆஸ்பத்திரி என்றே நீண்டகாலமாக மக்கள் அழைத்து வந்தனர்.
சென்னையின் ஒவ்வொரு இடத்தின் பின்னும் நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது கோடம்பாக்கமும், வடபழனியும் கிராமங்கள். வேளச்சேரியிலும், வளசரவாக்கத்திலும் விவசாயம் நடந்தது. அண்ணா நகரில் பச்சை வயல்வெளிகள் இருந்தன. கூவம் நதி தெளிந்த நீரோடையாக ஓடியது. அடையாற்றில் மீன் பிடித்து காலை குளியலை அங்கேயே நிகழ்த்தினர். பங்கிங்காம் கால்வாய் கித்தட்ட புதுச்சேரி வரை நீண்டு ஓடியது. இவற்றில் படகுகள் பயணித்தன.
நகரத்துக்குள்ளேயே நீர்வழித்தடங்கள் செழிப்பாக பாயக்கூடிய சாத்தியம் வெகு அரிதான நகரங்களுக்கே வாய்க்கிறது. அந்த வகையில் சென்னை முக்கியமான நகரம். ஆனால், இன்று நாம் அதை முற்று முதலாக அழித்துவிட்டோம்.
நவீன சாலைகள், போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ள ஏராளமான மேம்பாலங்கள், மின்சார ரயில், பறக்கும் ரயில், தற்போது மெட்ரோ ரயில். என சென்னை, தன்னை காலமாற்றத்துக்கு ஏற்ப தயார் படுத்திக்கொண்டே வருகிறது. இது திட்டமிட்டு கட்டப்பட்ட நகர் அல்ல. மக்கள் தொகை பெருக, பெருக. அதற்கு ஏற்ப தன்னை விஸ்தரித்துக் கொண்டே செல்கிறது.
No comments:
Post a Comment
Please Comment