சிபிஎஸ்இ பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு வரை மூன்று பாடங்களுக்கு மேல் பயிற்றுவிக்கும் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் எச்சரித்துள்ளார்.
சிபிஎஸ்இ பாடத்திட்ட பள்ளிகளின் பாடச்சுமையை குறைக்கக்கோரிய வழக்கில், இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்ற சிபிஎஸ்இ சுற்றறிக்கையை மூன்று வாரங்களுக்குள் தேசிய மற்றும் மாநில மொழி பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் புருஷோத்தமன் ஆஜராகி, 5-ஆம் வகுப்பு வரை மூன்று பாடங்களுக்கு மேல் நடத்தக்கூடாது என்ற அறிவிப்பை அமல்படுத்த வேண்டும் எனவும், என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களை மட்டுமே பின்பற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
நீதிபதியும் குறுக்கிட்டு 16 ஆயிரம் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் இருப்பதாக கூறுகிறார்கள், ஆனால் அதை உரிய நேரத்தில் ஆய்வு செய்வதில்லை என குற்றம்சாட்டினார். மேலும், 2-ஆம் வகுப்பு வரை மொழிப்பாடம், கணிதமும், 3-ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை சுற்றுச்சூழல் அறிவியல் பாடமும் சேர்த்து மூன்று பாடங்கள் மட்டும் பயிற்றுவிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். அதற்கு மேல் பயிற்றுவிக்கப்பட்டால், புத்தகங்கள் பறிமுதல் செய்யப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
No comments:
Post a Comment
Please Comment