பி.இ. துணைக் கலந்தாய்வு: இன்றுமுதல் சான்றிதழ் சரிபார்ப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பி.இ. துணைக் கலந்தாய்வு: இன்றுமுதல் சான்றிதழ் சரிபார்ப்பு

பி.இ. துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வியாழக்கிழமை (ஆக. 23) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.



இந்த துணைக் கலந்தாய்வில் பங்கேற்க 9,700 பேர் விண்ணப்பித்துள்ளனர். சிறப்புப் பிரிவினர் மற்றும் பொதுப் பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், பிளஸ்-2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து, சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பொறியியல் துணைக் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 26, 27 ஆகிய இரு தினங்களில் நடத்த உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கலந்தாய்வு உதவி மையத்தில் மட்டுமே இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். 
9,700 பேர் விண்ணப்பம்: இதில் பங்கேற்க கடந்த திங்கள்கிழமை (ஆக.20) வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், மொத்தம் 9,700 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வியாழக்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடத்தப்பட உள்ளது.



இது குறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது: பி.இ. துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள உதவி மையத்தில் மட்டுமே நடத்தப்படும்.



இதற்கு வரும் மாணவர்கள் தங்களிடம் உள்ள அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து வரவேண்டும். சான்றிதழ்களை நகல் எடுத்துக் கொள்வதும் அவசியம்.
ஆகஸ்ட் 25-இல் தரவரிசைப் பட்டியல்: மூன்று நாள்கள் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு, நாள் ஒன்றுக்கு 3,000 முதல் 3,500 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு செல்லிடப்பேசி குறுஞ்செய்தி, மின்னஞ்சல் முகவரி மூலம் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Please Comment