#Kerala flood - ThulirKalvi Blogs

Latest

Search This Site

#Kerala flood

கைகொடுத்துத் தூக்கிய தமிழகம்!” - நெகிழும் கேரள மக்கள்... களத்திலிருந்து ஒரு லைவ் ரிப்போர்ட்!


நன்றி: விகடன் குழுமம்!


மற்றவர்களுக்காக வாழ்கிற சில மனசுக்காரர்களை இயற்கைப் பேரிடர்கள்போதுதான் பார்க்க முடிகிறது. வீடு, வாசல், உடைமை என அனைத்தையும் இழந்து நிற்கிற கேரளா மக்களுக்கு ஒட்டுமொத்த தமிழகமே தோள் கொடுத்து நிற்கிறது. எங்கெங்கும் லாரிகள், வேன்கள் எனக் கேரளாவுக்கு தமிழகத்தின் அனைத்து எல்லைகளில் இருந்தும் நிவாரண பொருள்கள் சென்றுகொண்டிருக்கின்றன. கேரளாவுக்குச் சென்று தமிழ்நாடென்று சொன்னால் கட்டிக்கொள்கிறார்கள், தட்டிக் கொடுக்கிறார்கள், கண் கலங்குகிறார்கள், நன்றி சொல்கிறார்கள் கேரள மக்கள். தமிழகம் இப்போது தலை நிமிர்ந்து நிற்பதைப் பார்ப்பதற்கு அவ்வளவு நெகிழ்ச்சியாயிருக்கிறது.


கேரளாவின் கல்பட்டாவில் இருக்கிற நிவாரண முகாம்  ``வேறு என்ன பொருள் வேண்டும்” என்கிற குரல்களில் நிரம்பி வழிகிறது. 18-ம் தேதி முகாமில் 150 பேர் இருந்தனர். முண்டேரி என்கிற பகுதியில் இருக்கிற முகாமில் 900 பேர் இருந்தார்கள். அவர்களுக்குத் தேவையான பொருள்களைப் பக்கத்தில் இருந்து செய்து கொடுப்பதில் எல்லோருக்கும் ஆன்மாவாக இருக்கிறார்  தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆன்மன். இவர் தமிழ்நாட்டிலிருந்து கூடலூர் வழியாக வருகிற எல்லா நிவாரணப் பொருள்களையும் கல்பட்டாவில் இருக்கிற HIMUB என்கிற பள்ளியில் வைத்து தேவையான இடங்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார். இந்தப் பள்ளியில்தான் நிவாரண முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது.


 நாங்கள் அங்கு சென்றிருந்தபோது ‘குளிருக்கு அணிகிற ஸ்வெட்டர் வேண்டுமென சில பெண்கள் கேட்டனர். ஆன்மன் உடனடியாக அங்கிருந்த ஒருவரிடம் பணத்தைக் கொடுத்து 150 பேருக்கும் ஸ்வெட்டர் வாங்கி வந்து கொடுத்தார். அவரது அலைபேசிக்கு என்ன வேண்டும் என்ற அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. மக்களுக்குத் தேவையான பொருள்களை ஆன்மன் ஃபேஸ்புக்கில் பட்டியலிட்டதும் வேண்டிய பொருள்களைத் தமிழகத்தில் இருக்கிற மக்கள்  பல பகுதிகளிலிருந்தும் உடனடியாக கோத்தகிரிக்கு அனுப்பி வைக்கிறார்கள். கோத்தகிரி வருகிற நிவாரணப் பொருள்களை இனியன் மற்றும் தவமுதல்வன் என்கிற இரண்டு பேரும் ஒருங்கிணைத்துக் கூடலூர் வழியாக கல்பட்டாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். வெளியில் இருந்து பார்ப்பதற்கு எளிதான வேலையைப் போல தோன்றலாம். ஆனால், அதில் மிகப் பெரிய சவால் இருக்கிறது.



தமிழகத்தில் இருக்கிற கோத்தகிரியில் இருந்து கேரளாவில் இருக்கிற கல்பட்டா பகுதிக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு வருவதில் சாலை மிகப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. கடந்த 17-ம் தேதி கூடலூர் ஊட்டிச் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. மாற்று வழியாக கல்லட்டி பாதையைப் பயன்படுத்தலாம், ஆனால் கல்லட்டி பாதையில் சரக்கு வாகனங்களை எப்போதுமே அனுமதிப்பதில்லை. தாழ்வான பாதையில் அசம்பாவிதம் ஏதேனும் நிகழலாம் என்பதால்  சரக்கு வாகனங்களுக்கு அந்தச் சாலையில் அனுமதியில்லை. எல்லாத் தடைகளையும் கடந்து மழையில் பொருள்களைக் கொண்டு வருவதில் அதிக சவாலை சந்தித்திருக்கிறார்கள். 18-ம் தேதி முதல் அவர்களோடு இருந்ததில் நிவாரணப் பொருள்களைப் பிரித்துக் கொடுப்பதில் அதிக சிரமமிருப்பதை உணர முடிந்தது. முகாம் தவிர்த்து தனித்து விடப்பட்டிருக்கிற பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஜீப்பில் பொருள்களைக் கொண்டு போய் கொடுத்து வருகிறார்கள்.



ஆன்மனிடம் பேசினோம். ``ஒரு மனிதன் கூட இங்க பசியென்று சொல்லக் கூடாது தோழா, யாருக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்டால் என்னால் உடனடியாக செய்து கொடுக்க முடிகிறது, தமிழகத்திலிருந்து ஒரு நாளைக்கு மூன்று வாகனங்களுக்கு மேலாக நிவாரணப் பொருள்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் உதவி செய்கிற எல்லோருக்கும் நன்றி சொல்லியாக வேண்டும், பொருள்களைக் கொண்டு போய் சேர்க்கிற சாதாரண கருவி மட்டுமே நான், மனசு இருந்தால் போதும் உடல் எதை வேண்டுமானாலும் செய்யும். முண்டேரி முகாமில் சுமார் 1,000 பேர் இருந்தாங்க, அவங்க எல்லோருமே பழங்குடியின மக்கள், அதில் சுமார் 20 பெண்கள் கைக்குழந்தை வச்சிருக்காங்க, முகாமில் கொடுக்கிற உணவு அவர்களுக்குப் புதிதாக இருப்பதால் அவர்களின் உடல் அதை ஏற்றுக்கொள்வதில்லை. 



வீடுகளை வேறு இழந்திருப்பதால் அந்தச் சோகத்திலேயே இருந்தார்கள். குழந்தை வைத்திருக்கிற பெண்கள் சரிவர உணவு உண்ணாததால் குழந்தைகளுக்கான தாய்ப்பால் இல்லாமல் போய்விடுகிறது. இந்தப் பிரச்னையை அவர்களால் வெளியே சொல்ல முடியாமலும் போகிறது. குழந்தைகளுக்குச் சரிவர பால் கொடுக்க முடியாமல் இருந்திருக்கிறார்கள். இந்த  விஷயம் முகாமில் இருக்கிற எங்களுக்கும் தெரியாமல் போய் விட்டது. ஒரு பெண்மணி என்னிடம் வந்து தயங்கித் தயங்கி தகவலைச் சொன்னார். அழுகையே வந்துவிட்டது, எல்லோரும் முகாமில் நன்றாகயிருக்கிறார்கள் என அப்போது வரை நம்பிக்கொண்டிருந்தேன், இந்த விஷயம் என்னை உருக்குலைத்து விட்டது. உடனடியாக அங்கிருந்த 20 பெண்களுக்கும் பால்பவுடரை வாங்கிக் கொடுத்த பிறகே சகஜ நிலைக்கு என்னால் திரும்ப முடிந்தது. அடுத்த நாள் அந்த முகாமில் இருந்த பெண் என்னுடைய இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு அழுததை இப்போது நினைத்தாலும் உடலெல்லாம் நடுங்குகிறது” என்கிறார்.



கடந்த மாதம் 9-ம் தேதி கேரளாவின் மானந்தவாடியில் இருக்கும் நியூ மேன் என்கிற கல்லூரியில் 1300க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். 12-ம் தேதி அங்கும் வெள்ளம் புகுந்துவிட எல்லோரையும் மைசூர் சாலையில் இருக்கிற புனித பேட்ரிக் என்கிற பள்ளிக்கு மாற்றியிருந்தார்கள். அந்த முகாமுக்கு அரசு வழங்கும் உணவைத் தவிர வேறு எந்த நிவாரணப் பொருள்களும் வராமலே இருந்ததை அறிந்த ஆன்மன் 19-ம் தேதி இரவு 10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை எடுத்துக்கொண்டு கல்பட்டா வந்த 2 லாரிகளை அப்படியே மானந்தவாடி முகாமுக்கு வரவழைத்திருந்தார். எங்களுக்கும் தகவல் கொடுத்தார். இரவு 10:30 மணிக்கு நாங்களும் மானந்தவாடி போய் சேர்ந்தோம். கொட்டும் மழையில் இரவு 11 மணிக்கு இரண்டு லாரிகளும் மானந்தவாடி வந்து சேர்ந்தன. நிவாரணப் பொருள்களைப் பிரித்து அங்கிருந்த மக்களுக்குக் கொடுத்துவிட்டு அங்கிருந்து மீண்டும் கல்பட்டாவுக்கு திரும்பும்பொழுது மணி இரவு 2 மணி ஆகியிருந்தது. அடுத்த நாள் காலை 5:30 மணிக்கு முகாமில் ஒருவருக்குக் கடுமையான வயிற்று வலி என்கிற தகவலை ஆன்மனுக்கு தெரிவிக்கிறார்கள். அவர் உடனே அங்கிருந்து முகாமுக்குப் போனார். தமிழகத்திலிருந்து முகாமுக்கு வந்த மருந்துகள் எல்லாம் முண்டேரி முகாமில் இருந்ததால் உடனடியாக ஒரு மருத்துவரை அழைத்துக்கொண்டு மருந்தை எடுத்துக்கொடுத்த பிறகே மீண்டும் கல்பட்டாவுக்கு வந்தார்.


கல்பட்டா முகாமில் இருந்த பெண்கள் எல்லோருமே தமிழகத்தில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் நன்றி சொன்னவாறே இருக்கிறார்கள். ``நடந்தது மிகப் பெரிய விபத்து, இதிலிருந்து எப்படி மீண்டுவருவோம் எனத் தெரியவில்லை, ஆனால் தமிழக மக்களின் அன்பு எங்களுக்கு அதீத நம்பிக்கையைக் கொடுக்கிறது. விரைவில் மீண்டுவருவோம்”  என்கிறார் ஒரு பெண். மனிதம் எல்லா இடங்களிலும் இருப்பதை கல்பட்டாவில் இருந்த இரண்டு தினங்களில் உணர முடிந்தது. கல்பட்டா பகுதியிலிருக்கிற கடைகளில் நிவாரணப் பொருள்களை வாங்கினால் அங்கிருக்கிற விற்பனையாளர்கள் தள்ளுபடி கொடுக்கிறார்கள். இன்னும் சிலர் பணமே வேண்டாம் எடுத்துச் செல்லுங்கள் எனப் பொருள்களை எடுத்துக் கொடுத்து விடுகிறார்கள். ஆட்டோக்களில் நிவாரணப் பொருள்களுக்கு எந்தக் கட்டணமும் வாங்காததை நேரடியாகக் காண முடிந்தது. கேரளாவில் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் தமிழகம் கை கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறோம் என்று சொன்னாலே கேரள மக்கள் தழுவிக் கொள்கிறார்கள். சிலர் உணர்ச்சிவசப்படுகிறார்கள்.



``மோனே எல்லோருக்கும் நன்றி சொல்லு மோனே”  என்கிற கேரளாவின் குரலை ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் இப்போது சமர்ப்பிக்கிறோம்....

No comments:

Post a Comment

Please Comment