தமிழகத்தில் வரும் ஆண்டு 1550 புதிய எம்.பி.பி.எஸ். இடங்கள்!
புதிய மருத்துவ கல்லூரி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை சரிசெய்த தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதால் தமிழகத்தில் அடுத்த ஆண்டு 1550 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்க வாய்ப்பு உருவாகி இருக்கிறது.தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகளும் 13 தனியார் மருத்துவ கல்லூரிகளும், 10 நிகர்நிலை பல்கலைக் கழகங்களும் உள்ளன. இதில் அரசு மருத்துவ கல்லூரியில் 2750 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
இதற்கிடையே தனியார் மருத்துவ கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு இல்லாததால் அதன் உரிமத்தை நீட்டிக்க அகில இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்துவிட்டது.2017-ம் ஆண்டு மூன்று கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லாததால் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்தது.
இதனால் மருத்துவ படிப்பு இடங்கள் குறைந்தது.இந்த நிலையில் அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். இடங்கள் உயர்கிறது. அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க தனியார் கல்வி நிறுவனங்கள் அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பித்துள்ளன. இதே போல் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த தனியார் கல்லூரிகளும் தற்போது உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளன.கரூரில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்க தமிழக அரசு முடிவு செய்து இருக்கிறது. இதில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் இடம் பெறுகிறது. இதே போல் நெல்லை மருத்துவ கல்லூரி, மதுரை மருத்துவ கல்லூரிகளில் தற்போது தலா 150 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை 250-ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதியை பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மதுரையில் சி.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மற்றும் கோவை மருத்துவ கல்லூரிக்கு தடை இல்லா சான்றிதழ்களை தமிழக அரசு வழங்கி இருக்கிறது. மேலும் தனியார் கல்வி நிறுவனங்களும் கல்லூரிகள் தொடங்க விண்ணப்பித்துள்ளன.இதைதொடர்ந்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் தமிழ்நாட்டில் கல்லூரி தொடங்க விண்ணப்பித்துள்ள கல்வி நிறுவனங்களிலும், மாணவர் சேர்க்கை தடைவிதிக்கப்பட்டு தற்போது மீண்டும் விண்ணப்பித்துள்ள கல்வி நிறுவனங்களிலும் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து அனுமதி வழங்கும். தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்தால் 1200 இடங்கள் வரை கிடைக்கும்.
இதன் மூலம் அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் கூடுதலாக 1550 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்க வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
No comments:
Post a Comment
Please Comment