10, பிளஸ்-2 மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப புதிய தேர்வு மையங்கள் அமைக்க உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

10, பிளஸ்-2 மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப புதிய தேர்வு மையங்கள் அமைக்க உத்தரவு

10, பிளஸ்-2 மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப புதிய தேர்வு மையங்கள் அமைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.



10, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.



இந்த கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தபடி தேர்வு மையங்கள் ஏற்படுத்த அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-


பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் தேர்வு மையங்கள் பட்டியலை தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, மாணவர்களின் வசதிக்கு தகுந்தபடி தேர்வு மையங்கள் அமைப்பது அவசியம் என கருதப்படும் பள்ளிகளை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். அதன் பரிந்துரை அறிக்கையை முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்று அனுப்பிவைக்க வேண்டும்.



பள்ளியை நேரில் ஆய்வு நடத்திய பின், அவசியம் தேர்வு மையமாக அமைக்க வேண்டியதற்கான காரணத்தையும் விளக்க வேண்டும். அரசாணையில் உள்ள விதிகளின்படி இல்லாத பள்ளிகளை தேர்வு மையமாக அமைக்க பரிந்துரை செய்யும் கல்வி அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
10 கி.மீ. தொலைவுக்கு மேல் பயணம் செய்து தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே புதிய தேர்வு மையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள தேர்வு மையங்களில் ஏதேனும் ரத்துசெய்ய வேண்டியது இருந்தால், அதற்கான காரணங்களுடன் அறிக்கை அளிக்க வேண்டும்.
இந்த கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதமே நடைபெறவுள்ளதால், காலம்தாழ்த்தாமல் புதிய தேர்வு மையம் தொடர்பான அறிக்கையை வருகிற 17-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment