பள்ளிகளில் தாய் மொழியில்தான் பாடம் நடத்த வேண்டும்: தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பள்ளிகளில் தாய் மொழியில்தான் பாடம் நடத்த வேண்டும்: தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு

 நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் தாய் மொழியில்தான் பாடம் நடத்த வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஸதி, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் அனைவரும் டெல்லி சென்றனர். நேற்று முன்தினம் தேசிய விருதுக்கு தேர்வான அனைத்து ஆசிரியர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்நிலையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 45 ஆசிரியர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கி கவுரவித்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால் துணை ஜனாதிபதி விருது வழங்கினார். 




அதன்பின் அவர் பேசியதாவது:தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் இந்த நேரத்தில் நான் அரசுக்கு அறிவுரை கூற விரும்புகிறேன். இந்த அறிவுரை மத்திய அரசுக்கு மட்டும் அல்ல. அனைத்து மாநில அரசுகளுக்கும்தான். அது என்னவென்றால் கல்வியை தாய் மொழியில்தான் வழங்க வேண்டும். அதற்காக நான் ஆங்கில பள்ளிகளுக்கு எதிரானவன் அல்ல. அதற்காக ஆங்கில பள்ளிகளில் பயின்றால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி மற்றும் பல மாநில முதல்வர்கள் சாதாரண பின்புலத்தில் இருந்துதான் அரசியல் சாசனத்தின் மிகப்பெரிய பதவிகளை அலங்கரித்துள்ளனர். நமது வரலாற்று பாடத்தில் மகாத்மா காந்தி, நாராயண குரு, விஸ்வேஸ்வரய்யா, கபீர் போன்ற இந்திய வரலாற்று பிரபலங்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளின் பாடங்கள் இடம் பெற வேண்டும். ஆனால் தற்போதைய வரலாற்று பாடத்தில் இங்கிலாந்துக்காரர்கள் நமது நாட்டை எப்படி கொள்ளையடித்தனர் என்பது இடம் பெற்றுள்ளது. இது தேவையல்ல. நமது தாய் நாட்டை பற்றிய நெருக்கம் மாணவர்களுக்கு தேவை. 





மேற்கத்திய நாடுகளை விட நாம் இந்தியன் என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் அதிகரிக்க வேண்டும்.மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். தங்களது கல்வித்தரத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், தற்போது பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்கள் தரம் குறைந்தவண்ணம் உள்ளது. அதை அதிகரிக்க நவீன தொழில்நுட்பத்தை கல்வியில் மிகப்பெரிய அளவில் பயன்படுத்த வேண்டும். ஒரு மாணவனை நல்ல குடிமகனாக மாற்றும் திறனை ஆசிரியரைத்தவிர வேறு யாராலும் இந்த உலகில் செய்ய முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.





15 லட்சம் அரசு பள்ளிகளுக்கு நூலகம், விளையாட்டு வசதிகள்
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் பேசுகையில், ''பள்ளிக்கல்வித் துறையை மேம்படுத்த எனது துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தரமான கல்வியை வழங்குவதற்காகத்தான் சமக்ரா சிகபஷா அபியான் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கஸ்தூரிபா காந்தி வித்யாலாயா திட்டம் மூலம் 8 முதல் 12 வரையுள்ள வகுப்புகளை தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. 15 லட்சம் அரசு பள்ளிகளுக்கு நூலகம் மற்றும் விளையாட்டு வசதிகள் செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.




கூகுளால் குருவை மாற்ற முடியாது


துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு பேசுகையில்,' இப்போது மாணவர்கள் எதையாவது தேடி பார்க்க வேண்டும் என்றால் உடனே கூகுளுக்கு சென்று பார்க்கிறார்கள். அவர்கள் கவனம் கூகுள் நோக்கிச் சென்று விட்டது. ஆனால், கூகுளால் ஒருபோதும் குருவை மாற்ற முடியாது' என்றார்.





தேசிய நல்லாசிரியர் தேர்வு சர்ச்சைக்கு விளக்கம்
ஆண்டு தோறும் நாடு முழுவதும் இருந்து 300 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த ஆண்டு 45 ஆசிரியர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சம் அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்தது. 






தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் இருந்து 6,692 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் உள்ள கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் பட்டியலை இறுதி செய்து, அனைத்து மாநிலங்களிலும் இருந்து 152 பேர் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது. மூத்த கல்வியாளர் தலைமையிலான குழுவினர் அலசி ஆராய்ந்து இதில் 45 ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment