மாணவர்கள் தன்னகத்தே கொண்டிருக்கும் திறமைகளை வெளிக்கொணர்பவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, தமிழ் வழியில் படித்து சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு காமராஜர் விருது, தூய்மைப் பள்ளிகளுக்கு விருது வழங்கும் முப்பெரும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவில் 373ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள், பத்தாம் வகுப்பு பிளஸ் 2 வகுப்புகளை தமிழ் வழியில் படித்து நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர் 970 பேருக்கு காமராஜர் விருதுகள், மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் திட்டமான தூய்மைப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 40 பள்ளிகளுக்கு தூய்மைப் பள்ளிகள் விருது வழங்கப்பட்டன. விழாவில் முதல்வர் பேசியதாவது: இந்த ஆண்டு 11 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்களுக்கு மிதி வண்டிகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு 16 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், 16 நடுநிலைப் பள்ளிகள், 12 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 12 மேனிலைப் பள்ளிகள் என மொத்தம் 56 பள்ளிகள் புதுமைப் பள்ளிகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்க ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பேச்சாற்றல், சிறந்த கற்பனைத் திறன், கொண்ட மாணவர்களை ஊக்குவிக்க இந்த ஆண்டு முதல் போட்டிகள் நடத்தி இளம் படைப்பாளர்கள் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விழாவில் மகாத்மா காந்தியின் அனுபவ வழிக்கல்வி மற்றும் காந்தியின் அடிப்படைக் கல்வி என்ற புத்தகத்தை தமிழக அரசின் சார்பில் வெளியிட்டுள்ளேன். இதில் ஆசிரியர் பயிற்சிக்கான அம்சங்கள் அடங்கியுள்ளன. இந்த புத்தகத்தை படிப்பதன் மூலம் தமிழகத்தில் 57 ஆயிரத்து 533 தொடக்கப் பள்ளிகள் 92 லட்சம் குழந்தைகள், 12477 உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 40 லட்சத்து 41ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு விருது
தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. அதில் இந்த ஆண்டு முதல் மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், சென்னை கொடுங்கையூர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் முனியப்பன் ஆகிய இருவரும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றனர்.
தமிழ் வழியில் படித்து நல்ல மதிப்பெண் எடுத்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவியர் 960 பேருக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது. அதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், பிளஸ் 2 மாணவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது. தூய்மைப் பள்ளி விருதுகள் 40 பள்ளிகளுக்கு வ ழங்கப்பட்டதில் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விருதுகளை பெற்றனர்.

No comments:
Post a Comment
Please Comment