வெற்றியடைய கூடிய மாணவர்களிடம் மட்டும் கவனம் செலுத்துவது ஆசிரியரின் பொறுப்பல்ல. கற்றலில் பலவீனமாக இருக்கும் குழந்தைகள் மீது கவனம் செலுத்தி முன்னுக்கு கொண்டுவர ஆசிரியர்கள் உழைக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தினார்.புதுச்சேரி பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர் தினவிழா வில்லியனூரில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. கல்வித்துறை செயலர் அன்பரசு வரவேற்றார். அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி 20 பேருக்கு நல்லாசிரியர் விருதை வழங்கினார். பின்னர், பணி ஓய்வு பெற்ற 164 ஆசிரியர்களுக்கு முதல்வர் நாராயணசாமி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். இவ்விழாவில் காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு 'அனுபவக் கற்றல் - காந்தியடிகளின் நயீதலீம்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் கவர்னர் கிரண்பேடி பேசியதாவது: வீடு, பள்ளி என இரண்டு விதமான பள்ளிக் கூடங்களில் குழந்தைகள் உருவாக்கப்படுகின்றனர். பெற்றோர்கள் பெரும்பாலும் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தவுடன் தங்களின் பொறுப்பு முடிந்துவிட்டதாக நினைக்கும் மனநிலையில் உள்ளனர். பெற்றோர்கள் வெவ்வேறு பணிகளில் பிசியாக இருப்பதால் பிள்ளைகளை ஆசிரியர்கள் பார்த்து கொள்வார்கள் என்று இருக்கின்றனர். பள்ளியை விட்டு குழந்தைகள் வீட்டுக்கு வந்தவுடன் அவர்களை பெற்றோர்கள் கவனிப்பதே இல்லை. பள்ளியை விட்டு வந்தவுடன் குடும்பத்தில் இருக்கும் ஒருவர் குழந்தையை கவனிக்க வேண்டும். அப்போதுதான் அந்த குழந்தை நல்ல வழியில் செல்லும். பள்ளியை விட்டு வரும் குழந்தைகளை யாரெல்லாம் கவனிக்கிறார்களோ அந்த குழந்தைகள்தான் நாட்டில் பெயர் வாங்குகின்றனர். நல்ல அடையாளத்தை உருவாக்குகின்றனர். குழந்தையின் பிரகாசமான வாழ்வுக்கு தாய், தந்தை முதல் காரணமாக அமைகின்றனர். பெற்றோர்கள்தான் குழந்தைகளின் முதல் ஆசிரியர்களாக அமைகின்றனர். பெற்றோர்கள் இல்லாத இல்லத்தில் குழந்தைகள் நன்றாக வளர்வதில்லை. பணம், புத்தகம் உள்ளிட்ட பொருட்களை கொடுத்து பள்ளியில் சேர்த்துவிட்டால் பொறுப்பு முடிந்துவிட்டது என்று பெற்றோர்கள் நினைக்கின்றனர். இதனால்தான் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனை அறியாமல் பல பெற்றோர்கள் உள்ளனர்.
பெரும்பாலான பெற்றோர்கள் தொலைக்காட்சியில் மட்டுமே தங்களின் கவனத்தை செலுத்துகின்றனர். இதுதான் இன்றைய பெற்றோர் இருக்கும் இல்லங்களின் நிலை. குழந்தைகளை உருவாக்குவதிலும், படைப்பு திறனை வளர்ப்பதிலும் பெற்றோர்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. இதனை அறியாமல் பெற்றோர் இருக்கின்றனர். குழந்தைகள் தங்களுடைய வீட்டு பாடங்களையும் பள்ளியிலேயே முடித்துவிட்டு வருகின்ற அவலநிலை உள்ளது. காரணம் வீட்டில் பெற்றோர் குழந்தைகளை கவனிப்பதில்லை. ஒரு ஆசிரியரின் முதல் கடமை அந்த வகுப்பில் உள்ள அனைத்து குழந்தைகளையும் கவனித்து அக்கறை செலுத்த வேண்டும். வெற்றியடைய கூடிய மாணவர்களிடம் மட்டும் கவனம் செலுத்துவது ஆசிரியரின் பொறுப்பல்ல. கற்றலில் பலவீனமான இருக்கின்ற குழந்தைகள் மீது கவனம் செலுத்தி முன்னுக்கு கொண்டுவர உழைக்க வேண்டும்.
ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையிலேயே குழந்தைகளுக்கு அதன் மீது விருப்பம் ஏற்படுகிறது. குழந்தைகள் பள்ளி, வீடுகளுக்கு இணைப்பு பாலமாக உள்ளனர். பெற்றோருடன், ஆசிரியர்கள் நல்லுறவு வைத்து கொண்டு குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். அங்குதான் பெற்றோர், ஆசிரியர் சங்கம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சில பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் சங்கம் சிறப்பாகவும், சில பள்ளிகளில் பலவீனமாகவும் உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கண்டிப்பாக அமர்ந்து கற்பதை பார்க்க வேண்டும். அவர்களுடன் உரையாட வேண்டும். கற்று கொடுக்க வேண்டும். விளையாட்டு, கைவினை, உடற்பயிற்சி அனைத்தும் சேர்ந்ததுதான் குழந்தைகளின் கல்வி. அதனை பெற்றோர், ஆசிரியர்கள் உணர வேண்டும். இதன் மூலம் புதிய இந்தியாவை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு குழந்தையும் ஒரு அப்துல் கலாமாக மாற முடியும்.
இவ்வாறு கவர்னர் பேசினார். இவ்விழாவில் இணை இயக்குநர் குப்புசாமி, கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பங்குஆசிரியர் தினவிழாவில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: புதுச்சேரி பட்ஜெட்டில் 11 சதவீம் நிதி கல்விக்காக செலவிடுகிறோம். மத்தியில் இருக்கும் அரசு கல்விக்காக 6 சதவீதம் செலவு செய்கின்றனர். புதுச்சேரி அரசு மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டும் என்பதற்காக நிறைய நிதி ஒதுக்கி அதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளோம். உயர்க்கல்வி மற்றும் பள்ளிக்கல்வியில் நாம் படிப்படியாக வளர்ந்து வருகிறோம். திறன் மேம்பாட்டில் நம்முடைய மாநிலம் உயர்ந்து வர வேண்டுமென்றால் அடிப்படை கல்வி தரமாக இருக்க வேண்டும். அப்போது தான் திறன் மேம்பாட்டை உயர்த்த முடியும். அதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.
ஒரு மாணவனுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்றால், அது ஆசிரியர் கையில்தான் உள்ளது. மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு. ஆசிரியர்கள் தான் திறமையான மாணவர்களை உருவாக்க முடியும். பள்ளிக்கு வந்தோம், பாடம் நடத்தினோம் என்பதோடு ஆசிரியர்களின் கடமை முடிந்து விடுவதில்லை. மாணவர்களுடன் ஒன்றினைந்து பள்ளி வளர்ச்சிக்கு பாடுபட்டோம். மாணவர்களை ஊக்குவித்தோம் என்பது தான் மிக முக்கியமானது. இதற்கான நடவடிக்கைகளை மற்ற ஆசிரயர்கள் எடுக்க வேண்டும். தனியார் பங்களிப்புடன் பள்ளிகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையை நாங்கள் எடுப்போம். ரூசா திட்டத்தில் மத்திய அரசு நூறு சதவீதம் பணம் நமக்கு கொடுத்து வந்தனர். அது படிப்படியாக குறைக்கப்பட்டு 60 சதவீதம் என்று கூறினர்.
டெல்லிக்கு சென்றிருந்த கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் கல்வி அமைச்சர் மாநாட்டில் பேசியுள்ளார். மத்திய அமைச்சரை சந்தித்து எங்களுக்கு 100 சதவீத நிதிக்கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். எங்களுக்கு மற்ற யூனியன் பிரதேங்களை போன்று நிதி கொடுக்க வேண்டும் என்று கேட்டோம். இப்போது அதனை கொடுப்பதாக மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் ரூ.60 கோடி அதிகமாக கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment
Please Comment