அடுத்த கல்வியாண்டு முதல் தனியார் பள்ளிக்கு இணையாக மாணவர்களுக்கு புதிய சீருடை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அடுத்த கல்வியாண்டு முதல் தனியார் பள்ளிக்கு இணையாக மாணவர்களுக்கு புதிய சீருடை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அடுத்த கல்வியாண்டு முதல் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தில், 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு உயர்நிலைப் பள்ளிக்காக புதிய கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது. 





பூனிமாங்காடு அரசு உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளிகளின் திறப்பு நேற்று நடந்தது. விழாவுக்கு பி.எம்.நரசிம்மன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். கோ.அரி எம்பி முன்னிலை வகித்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பள்ளிகளை திறந்துவைத்தார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:








தமிழகத்தில்தான் கல்வியில் புரட்சி ஏற்படுத்தி வருகிறோம். நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் சீருடை மாற்றம் செய்யப்பட்டது. அடுத்த கல்வியாண்டு முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு நிகராக, வண்ண சீருடை மாற்றம் செய்யப்படும். அடுத்த ஆண்டிற்குள், 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் ஏற்படுத்தி, 6 முதல் 9 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்படும். இனிவரும் காலங்களில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை எனக் சொல்லக்கூடாது என பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம், 7500 ரூபாய் சம்பளத்தில் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம்.





இவ்வாறு அமைச்சர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின், எம்எல்ஏக்கள் பலராமன், விஜயகுமார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் பவணந்தி, தாசில்தார் செங்கலா, வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், முன்னாள் ஆவின் சேர்மன் வேலஞ்சேரி த.சந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் திருத்தணி இ.என்.கண்டிகை ஏ.ரவி, பள்ளிப்பட்டு சாந்திபிரியா சுரேஷ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் டி.டி.சீனிவாசன், நகர அவைத்தலைவர் குப்புசாமி, திருவாலங்காடு ஒன்றிய செயலாளர் சக்திவேல், முன்னாள் கவுன்சிலர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







விழாவில், பிஎம்.நரசிம்மன் எம்எல்ஏ பேசும்போது, ''பூனிமாங்காடு அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 1961ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பகுதி மாணவர்கள் மேல்நிலைக் கல்வி கற்க வேண்டும் என்றால் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்லவேண்டும். 2018ம் ஆண்டு இப்பள்ளியை அமைச்சர் செங்கோட்டையன் 12ம் வகுப்பு வரை தரம் உயர்த்தி திறந்து வைத்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்' என்றார்.

No comments:

Post a Comment

Please Comment