கல்வியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். போட்டித்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: மாணவர்களுக்கு கற்பிப்பதில் ஆசிரியர்களுக்கு பேரார்வம் இருக்க வேண்டும். புதிய பாடத்திட்டங்களை சிறப்பாக கற்பிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கல்வித்துறைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக நிதி இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. கல்லாதோர் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வது பெருமிதமாக உள்ளது. கருவறை, ஆசிரியர் உள்ள வகுப்பறை இரண்டும் முக்கியமானது. ரூ 21.78 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் தற்காப்பு கலை பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 11 லட்சம் மாணவர்களுக்கு இந்தாண்டு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது. '14417' என்ற தொலைபேசி எண் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் 373 நல்லாசிரியர் விருதுகளும், 40 பள்ளிகளுக்கு தூய்மைக்கான விருதுகளையும் முதல்வர் வழங்கினார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், அன்பழகன், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, வளர்மதி மற்றும் தலைமைச்செயலாளார் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
Please Comment