திருக்குறளுக்கு விரைவில் உலகப் புத்தக அங்கீகாரம் கிடைக்கும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் உறுதிபட தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் தமிழ்ச் சாலையில் உள்ள தமிழ் வளர்ச்சி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மற்றும் தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட தலைவர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது உருவப் படங்கள் திறப்பு விழா நேற்று நடந்தன. இதில், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலையையும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோ ரது உருவப் படங்களையும் திறந்துவைத்தார்.
அதையடுத்து நடைபெற்ற விழாவில், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விஜயராகவன் வரவேற்றார். தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தலைமை உரையாற்றும்போது, “உலக தமிழ் சங்கத் தலைவர் வி.ஜி. சந்தோஷம், உலகம் முழுவதும் திருவள்ளுவர் சிலைகளை நிறுவி வருகிறார். அதன்படி இந்த வளாகத்தில் 40-வது சிலை நிறுவப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு விரைவில் உலகப் புத்தக அங்கீகாரம் கிடைக்கும். அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்” என்றார்.
மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசும்போது, “எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய திருக்குறள் வழங்கிய திருவள்ளுவரின் சிலை யும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயல லிதா ஆகியோரது உருவப் படங்களும் திறக்கப்பட்டுள்ளன. கணினித் தமிழை அறிமுகப் படுத்திய ஜெயலலிதா, உலகத் தமிழ் இணைய மாநாட்டையும் நடத்தினார்” என்றார்.
நிறைவில், தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் தியாகராஜன் நன்றி கூறினார். முன்னாள் எம்பி நா.பாலகங்கா, மத்திய சென்னை எம்பி எஸ்.ஆர். விஜயகுமார், உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் விஜிபி சந்தோஷம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
Please Comment