நீட் கருணை மதிப்பெண் குறித்த தீர்ப்பு ஒத்தி வைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நீட் கருணை மதிப்பெண் குறித்த தீர்ப்பு ஒத்தி வைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு


 நீட் தேர்வின் போது வினாத்தாள் மொழிமாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணத்தால் தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்துள்ளது. நீட் தேர்வின்போது தமிழில் வினாத்தாள் குளறுபடி ஏற்பட்டதால் அதில் தவறாக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு தலா 4 வீதம் 196 மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. 







இதனை எதிர்த்து சிபிஎஸ்இ தரப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவிட்டது.இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் எஸ்ஏ.பாப்டே மற்றும் நாகேஸ்வரராவ் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்ஜிஆர்.பிரசாத் வாதத்தில்,' நீட் தேர்வின் போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது ஏற்பட்ட பிழையால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு கலைந்து விட்டது. இதில் இந்தி வினாத்தாளில் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்பட்டு இருந்திருந்தால் சாதாரணமாக விட்டு இருப்பார்களா?. தமிழக மாணவர்களுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை பாதிப்பை சிபிஎஸ்இ தொடர்ந்து ஏற்படுத்துகிறது. அதனால் தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்ணை வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். இதற்கு சிபிஎஸ்இ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.






இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உத்தரவில்,' நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு என தனி சலுகை என்பதை ஏற்க முடியாது. மருத்துவ படிப்பின் போது ஆய்வகத்தில் கேட்கப்படும் கேள்விகள் என்பது தமிழுடன் ஒத்து வருமா என்பதை யோசித்து பார்க்க வேண்டும். இதில் தமிழக மாணவர்கள் ஆங்கிலத்தில் பின் தங்கியது தான் பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும். 











மேலும் ஒரு சில வார்த்தை பிழையை வைத்துக்கொண்டு வாக்கியத்தையே பிழை என்று கூற முடியாது. அதுபோன்று தான் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட பிரச்னையாகும். அதனை மாணவர்கள் ஆங்கில வினாத்தாளை பார்த்து சரி செய்து கொண்டிருக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கில் அனைத்துக்கட்ட விசாரணைகளும் முடிந்து விட்டது எனக்கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நேற்று ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Please Comment