“கடந்த கால் நூற்றாண்டில் மட்டும் வீடு, அலுவலகம் என இரட்டைப் பளுவைச் சுமக்கும் வாழ்க்கைமுறையால் இந்தியாவில் ஆண்களைவிடப் பெண்களுக்கு ஆரோக்கியப் பிரச்சினைகள் தலைதூக்குவது பல மடங்கு அதிகரித்துள்ளது” என்கிறது அசோசேம் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை. இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘உலகப் பெண்கள் தின’த்தை முன்னிட்டு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. பல்வேறு துறைகளில் சாதனைகளை நிகழ்த்திவரும் பெண்களின் உடல்நலம் குறித்த இந்த எச்சரிக்கை எளிதில் புறந்தள்ளத்தக்கதல்ல!
நாட்டின் பத்து பெரிய நகரங்களில், 120 கார்ப்பரேட் நிறுவனங்களில், 30-லிருந்து 50 வயதுக்கு உட்பட்ட 2,800 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் முக்கால்வாசிப் பேருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட ‘தொற்றா நோய்கள்’ இருப்பதாகக் கண்டறியப்பட்டுள் ளது. உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், அதீத கொழுப்பு, நீரிழிவு, இதயநோய், சிறுநீரக நோய், புற்றுநோய், முதுகுவலி, மன அழுத்தம், ரத்தசோகை, ஹார்மோன் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு 100-ல் இருவர்கூட தொடக்கத்திலேயே சரியான சிகிச்சைக்குச் செல்வதில்லை என்று சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, வேலைப் பளு, நேரமின்மை, நோய் அறியாமை போன்ற காரணங்களால் பெண்கள், மருத்துவரிடம் செல்லாமல், கைப்பக்குவம் பார்த்துக்கொண்டு சமாளிக்கின்றனர் என்றும் கவலை தெரிவித்திருக்கிறது.
என்ன பிரச்சினை?
ஆரோக்கியத்துக்கு அடிப்படை - நேரத்துக்கு உணவு. ஆனால், வேலைக்குப் போகும் பெண்களில் பெரும்பாலானோர் காலை உணவைத் தவிர்க்கின்றனர். ஊட்டச்சத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கிடைத்த உணவைக் கொறித்துவிட்டு அலுவலகம் செல்கின்றனர் அல்லது அலுவலக உணவகங்களில் கிடைக்கும் நொறுக்குத்தீனிகளை வாங்கி உண்கின்றனர். இந்தப் பழக்கம் அல்சரில் தொடங்கி ரத்தசோகை வரை பல பாதிப்புகளுக்குக் காரணமாகிறது. இவற்றோடு பயணக் களைப்பும் சேர்ந்துகொள்ள, உடல்சோர்வும் உளச்சோர்வும் பெண்களை ஆட்கொள்கின்றன.
வார நாட்களில் சரியாகச் சாப்பிட முடியாத அவர்கள் வார இறுதியில் வெளியிடங்களுக்குச் சென்று துரித உணவுகளைச் சாப்பிடுகின்றனர். இவற்றில் மிதக்கும் எண்ணெயும் உப்பும் அதீத கொழுப்பும் உடற்பருமனுக்குத்தான் வழிசெய்கிறது. அவர்களால் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை என்பதும் இதற்கு ஒரு காரணம். இந்த உடற்பருமன் பிரச்சினை உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம், ஹார்மோன் பிரச்சினை போன்ற ஆபத்தான நோய்களுக்கும் அடித்தளம் இடுகிறது என்பது கவனிக்கத்தக்கது. 30 ஆண்டுகளுக்கு முன்புவரை மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை பெண்களுக்கு 50 வயதுக்கு மேல் மாதச்சுழற்சி நின்ற பிறகுதான் ஏற்பட்டது. இப்போதோ இந்த இரண்டு நோய்களும் 30 வயதிலேயே ஏற்படுவதுதான் இதற்கு சாட்சி.
மார்பகப் புற்றுநோய்

No comments:
Post a Comment
Please Comment