அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் நடத்தப்படுகிறதா? ஐகோர்ட் உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் நடத்தப்படுகிறதா? ஐகோர்ட் உத்தரவு


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றனவா என்பது தொடர்பான விவரங்களை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்எம்எல்ஏ எம்.அப்பாவு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 37 ஆயிரத்து 211 அரசு பள்ளிகளும், 12 ஆயிரத்து 419 தனியார் பள்ளிகளும், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் ஒரு கோடியே 25 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். தமிழக அரசு கல்விக்காக ஆண்டுதோறும், ரூ.27 ஆயிரம் கோடி செலவிட்டு வருகிறது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பை முடித்த பிறகு, ஆங்கிலம் பேசக்கூடிய நிலையில் இல்லை. அவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச முடியாததால் உயர் கல்வியில் சேர்வதற்கும், வேலை வாய்ப்புகளில் மற்றவர்களுடன் போட்டியிடுவதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. 

மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் போட்டிகளில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் ஆங்கிலத்தில பேச்சுத்திறன் இல்லாததால் தோல்வியைத் தழுவ வேண்டிய நிலை உள்ளது. 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ்வழி பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்தினால்தான் இதற்கு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்த முடியும். எனவே, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி மழலையர் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் எனக்கோரி கடந்த மாதம் 15ம் தேதி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். 
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனுவைப் பரிசீலித்து அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறனை வளர்க்க (ஸ்போக்கன் இங்கிலீஷ்) நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை படித்துப் பார்த்த நீதிபதிகள், 'நமது தாய்மொழி தமிழ். குழந்தையிலிருந்தே தாய்மொழியைத்தான் கற்றுத்தர வேண்டும். இப்போதெல்லாம் குழந்தைகள் தங்கள் தாயை 'அம்மா' என்பதற்குப் பதில் 'மம்மி' என்று அழைக்கிறார்கள். மனுதாரர் கூறுவதுபோல் எல்கேஜியில் இருந்தே ஆங்கில பேச்சுத்திறனை கொண்டுவந்தால் இனிமேல் மம்மிதான் என்றனர். அதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல், ஆங்கில வழியில் பாடம் நடத்தப்படவில்லை. ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளுக்கு ஆங்கில அறிவை கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை என்றார்.அப்போது, ஆஜரான அரசு வக்கீல், அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி போன்ற மழலையர் வகுப்புகள் இந்த கல்வியாண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'தமிழகத்தில் உள்ள கிராமங்கள், நகராட்சி பகுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எத்தனை பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்ற விவரத்தையும், எத்தனை பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்ற விவரத்தையும் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் வரும் நவம்பர் 8ம் தேதி தெரிவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Please Comment