மதுரை வைகை ஆற்றில் 2010-ம் ஆண்டுக்கு பிறகு இரு கரைகளை யும் தொட்டபடி தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதைப் பார்க்க மக்கள் திரண்டு வருகின்றனர். ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மதுரையில் வைகை ஆற்று தரைப் பாலங்களுக்கு ‘சீல்’ வைத்து பொதுமக்கள், வாகனங்கள் செல்ல போலீஸார் தடை விதித்துள்ளனர்.
வைகை அணையில் இருந்து வைகை ஆற்றில் 3,000 கன அடி நீர் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் ‘திடீர்’ கன மழையால் மஞ்சளாறு மற்றும் வரதமாநதி ஆற்றிலிருந்து கூடுதலாக 9,000 கன அடி தண்ணீர் வைகை ஆற்றில் வந்தது. அதனால் நேற்று காலை முதலே வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
மதுரையில் 2.010 ஆண்டுக்குப் பிறகு வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இதை பார்க்க ஏராளமான மக்கள் திரண்டு வருகின்றனர். நேற்று காலையில், தரைப்பாலங்களை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. பிற்பகலுக்குப் பிறகு தண்ணீர் ஓரளவு குறையத் தொடங்கியது. ஆனாலும், நேற்று காலை முதலே பொதுமக்கள், வாகன ஓட்டிகளை தரைப்பாலங்கள் வழியாக செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை.
மதுரை நகர் பகுதியில் இளைஞர்கள், சிறுவர்கள் ஆர்வக் கோளாறில் ஆற்றில் குளித்து உயிர் பலி ஏற்படுவதைத் தடுக்க ஏராளமான போலீஸார் இரு கரை பகுதிகளிலும் நின்று கண்காணித்தனர்.
வைகை ஆற்றில் தண்ணீர் சீறிப் பாய்ந்ததை மக்கள் வீடியோ எடுப்பதும், செல்ஃபி எடுப்பதுமாக இருந்தனர்.
No comments:
Post a Comment
Please Comment