கொதிக்க வைத்த நீரை மட்டுமே குடிக்க வேண்டும் வெள்ளத்தில் நனைந்த உணவுப் பொருளை சாப்பிடக் கூடாது பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுரை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கொதிக்க வைத்த நீரை மட்டுமே குடிக்க வேண்டும் வெள்ளத்தில் நனைந்த உணவுப் பொருளை சாப்பிடக் கூடாது பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுரை

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில், வெள்ள நீரில் நனைந்த உணவுப் பொருட்களை மக்கள் சாப்பிடக் கூடாது. கொதிக்க வைத்த நீரை மட்டுமே குடிக்க வேண்டும் என்று பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்தார்.




தமிழகத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற கடலோர மாவட்டங்களில் சுகாதாரத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடமாடும் சிறப்பு மருத்துவக் குழுக்கள், மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.




இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை வழங்கியுள்ளது. இதுபற்றி துறை இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி கூறியதாவது:


புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான வசதிகள், மருந்துகளுடன் அரசு மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்படுகின்றன. இதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மருத்துவ முகாம்கள், நடமாடும் மருத்துவக் குழுக்களிடம் அவர்கள் தேவையான சிகிச்சைகள், ஆலோசனைகளைப் பெற லாம். மருத்துவ முகாம்கள், அனைத்து அரசு மருத்துவமனைகளில் காயம் அடைந்தவர்களுக்கு ரணஜன்னி தடுப்பூசி போடப்படுகிறது.



நீர், பூச்சிகளால் பரவும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் வராமல் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.



சுத்திகரிக்கப்படாத தண்ணீர் பாதுகாப் பானது அல்ல. எனவே, சரியான அளவில் குளோரின் கலந்த, பாதுகாப்பான தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது நல்லது. மூழ்கிய ஆழ்துளை கிணறுகள், தரைமட்ட குடிநீர் தொட்டிகள், திறந்தவெளி கிணறுகளை நன்கு சுத்தம் செய்த பிறகே குடிநீர் சேகரிக்க பயன்படுத்த வேண்டும். முகாம்களில் தங்கியுள்ளவர்கள் அங்கு தரப்படும் தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும்.
வெள்ள நீரில் நனைந்த உணவுப் பொருட்களை சாப்பிடக் கூடாது.
தொற்றுநோய் வராமல் தடுக்க சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவ வேண் டும். கழிவறைகளில் மட்டுமே இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டும்.
யாருக்காவது காய்ச்சல், வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ முகாம்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். ஒரே தெருவில் 3 பேருக்கு மேல் காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது நடமாடும் மருத்துவக் குழு அல்லது பொது சுகாதார கட்டுப்பாட்டு மையத்துக்கு 044-24350496, 24334811, 9444340496, 8754448477 என்ற எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும்.
குளங்கள், திறந்தவெளி கிணறுகளில் இருந்து தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தால் உடனடியாக தகவல் தரவேண்டும்.
டயர், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பழைய பெயின்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகும்.
எனவே, மழைநீர் தேங்கும் வகையில் உள்ள தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். இறந்த விலங்குகள், பறவைகளைப் பார்த்தால் உடனடியாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Please Comment