மேற்கு வங்க மாநிலத்தில், மாணவர் சேர்க்கைக்கான, நோட்டீசில் 'இஸ்லாம்பூர்' என்பதற்கு பதில், ஈஸ்வர்பூர் என அச்சிட்ட, அரசு பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல், காங்., ஆட்சி நடக்கிறது.இங்கு, மேற்கு தினாஜ்பூர் மாவட்டம், இஸ்லாம்பூரில், 'சரஸ்வதி சிஷு மந்திர்' என்ற அரசு பள்ளி உள்ளது. 8ம் வகுப்பு வரையுள்ள இந்த பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
சமீபத்தில், இந்த பள்ளி வெளியிட்ட, மாணவர் சேர்க்கைக்கான, நோட்டீசில் இஸ்லாம்பூர் என்பதற்கு பதில், ஈஸ்வர்பூர் என அச்சிடப்பட்டு இருந்தது.இதுகுறித்து விசாரணை நடத்தும்படி, மாநில கல்வித் துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி உத்தரவிட்டதை தொடர்ந்து, பள்ளிக்கு சென்ற கல்வித் துறை அதிகாரிகள், பள்ளியின் அங்கீகார கடிதம், சேர்க்கைக்கான நோட்டீஸ் உள்ளிட்ட ஆவணங்களை, ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் குடிராம் ராய் கூறியதாவது:அனைத்து ஆவணங்களிலும், இஸ்லாம்பூர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒரு சில நோட்டீஸ்களில், ஈஸ்வர்பூர் என அச்சாகியிருந்தது. இதை பிரச்னையாக்கி, பள்ளியின் அங்கீகாரத்தை மாநில கல்வி துறை ரத்து செய்துள்ளது.
இதனால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மேற்கு வங்க மாநில கிராமப் பகுதிகளில், பல பகுதிகள், இரண்டு பெயர்களில் அழைக்கப்படுவது வழக்கம் எனக் கூறிய, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ததை எதிர்த்து, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Please Comment