போலி ஆசிரியர்கள் உள்ளனரா என கண்டுபிடிக்க விழுப்புரம் மாவட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கும் வகையில் உடற்கல்வி, தையல், ஓவியம் உள்ளிட்ட பணிகளுக்கு பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தொகுப்பூதியத்தில் பணி நியமிக்கப்பட்ட இவர்களில் பலர் போலியான சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்திருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் அறிவித்தபடி சான்றிதழ் இல்லாமல் பல பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. தையல் ஆசிரியர் பணிக்கு தேர்வுத் துறை நடத்திய ஆசிரியர் பயிற்சியை முடிக்காமல் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை நடத்திய சான்றிதழை வைத்திருப்பவர்கள் பணியாற்றி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. கோவையில் 3 ஓவிய ஆசிரியர்கள், ராமநாதபுரத்தில் 3 ஆசிரியர்கள், காஞ்சிபுரத்தில் 4 ஓவிய ஆசிரியர்கள், 39 தையல் ஆசிரியர்கள், இசை பாடத்தில் 18 ஆசிரியர்கள் உரிய தகுதியில்லாமல் பணியாற்றி வருகின்றனர்.
அதேபோல், திண்டுக்கல்லில் 22 ஓவிய ஆசிரியர்களும், ஈரோட்டில் 5 ஓவிய ஆசிரியர்களும், 2 தையல் ஆசிரியர்களும், திருப்பூரில் 2 ஓவிய ஆசிரியர்களும், 13 இசை ஆசிரியர்களும் தகுதியில்லாதவர்கள் என தெரியவந்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் தற்காலிக பகுதி நேர ஆசிரியர்களின் சான்றிதழ்களையும் சரிபார்த்து, போலி ஆசிரியர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பகுதி நேர தற்காலிக ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 1072 தற்காலிக பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்
களின் சான்றிதழ்கள் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது. விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமையிலான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இந்த ஆய்வு நடக்கும். அதன்பிறகு போலி சான்றிதழ்கள் கொடுத்து யாரேனும் சேர்ந்துள்ளார்களா என்ற விவரம் தெரிய
வரும் என கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Please Comment