விண்வெளியில் காலாவதியான செயற்கைகோள்கள் என்னவாகின்றன? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

விண்வெளியில் காலாவதியான செயற்கைகோள்கள் என்னவாகின்றன?





மனிதனால் உருவாக்கப்படும் ஒவ்வொரு எலக்ட்ரானிக் பொருளுக்கும் குறிப்பிட்ட வாழ்நாள் உண்டு. எலக்ட்ரானிக் சாதனங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் பழுதாகி தானாகவே செயலிழந்துவிடும். மீண்டும் உபயோகிக்க முடியாத அவற்றை மறுசுழற்சி செய்வதுதான் சூழலியலுக்கு நல்லது. ஆனால், விண்வெளியில் பழைமையான செயற்கைகோள்களை அப்படிச் செய்ய முடியாது. அப்படியென்றால் அவற்றை என்ன செய்கிறார்கள்?




ஒரு பொருளை சுற்றுப் பாதையில் (ஆர்பிட்) சுற்றும் மற்றொரு பொருள் கோள் என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் இயற்கை கோள் மற்றும் செயற்கை கோள் என இரண்டு வகைகள் இருக்கின்றன. பூமியைத் தனது சுற்றுப் பாதையில் சுற்றி வரும் வளிமண்டலக் கோள்கள், `இயற்கை கோள்கள்' என அழைக்கப்படுகின்றன. மனிதனால் உருவாக்கப்படும் கோள் தனது சுற்றுப் பாதையில் சுற்றி வருபவை `செயற்கை கோள்கள்' என அழைக்கப்படுகின்றன. இதில் இயற்கையான கோள்களை பற்றி கவலை கொள்ள தேவையில்லை. அவை தனது வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருக்கும். ஆனால், செயற்கையாக உருவாக்கப்பட்ட கோளானது விண்ணில் சில ஆண்டுகள் மட்டுமே பயணத்தைத் தொடர முடியும். நிர்ணயிக்கப்பட்ட காலத்தை நீடிக்கச் செய்ய முடியாது. அதனால் அவற்றை சுற்றுப் பாதையை விட்டு இறக்கிச் செயலிழக்க வைக்கப்படும் அல்லது அழிக்கப்படும்.



மேலே அனுப்பப்படும் பல செயற்கை கோள்கள் பல்வேறு காரணங்களுக்காக அனுப்பப்படுகின்றன. அவற்றில் பொதுவாக புவி கண்காணிப்பு, தகவல் தொடர்பு, வானிலை, கோள் ஆராய்ச்சி எனப் பொதுவான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாடும் தனது பாதுகாப்புக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துகின்றன. ஒரு செயற்கை கோள் 25 ஆண்டுகள் வரைகூட தனது பணியைச் சிறப்பாகச் செய்யும். அதன் பின்னர் அதன் செயல்திறன் குறைந்து பழுதாகி, செயலற்றதாக்கி விடும். செயலிழக்கும் செயற்கை கோளானது மற்ற செயற்கை கோள்களுடன் மோதி விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகளும் இருக்கின்றன. அதனால் அந்தச் செயற்கை கோளை பாதுகாப்பாகச் செயலிழக்கச் செய்ய வேண்டும். செயலிழக்க வைக்கும் நேரங்களில் மனிதர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பாக கையாள்வது அவசியம். இதற்கு இரண்டு வழிகள் மட்டுமே இருக்கின்றன. இரண்டில் எந்த வழி என்பதைச் செயற்கை கோளின் தொலைவுதான் தீர்மானிக்கிறது.





முதல் வழி, வெகு தொலைவில் இருக்கும் செயற்கை கோளாக இருந்தால், மேலும் தொலைவுக்கு அனுப்பி விடுவார்கள். அதாவது கைவிடப்படும் செயற்கை கோளை சுற்று வட்டப் பாதையை விட்டு விலக்கி 300 கி.மீ.க்கு மேல் அதிக தொலைவில் அனுப்பப்பட்டு விடும். அந்தப் பகுதியின் பெயர் கல்லறை கோளப் பாதை என்று அழைக்கப்படுகிறது. கல்லறை கோளப் பாதைக்கு அனுப்பப்படும் செயற்கை கோளானது பல மில்லியன் ஆண்டுகளுக்கு அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும். இவற்றிற்கு `விண்வெளிக் குப்பைகள்' என்று பெயர். பூமிக்கு வெகு தொலைவில் அனுப்பப்படும் செயற்கை கோளை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து எரிப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. ஏனெனில் செயலிழக்கும் தன்மை கொண்ட நிலையில் இருக்கும் செயற்கை கோளில் எரிபொருள் குறைவானதாகவே இருக்கும். அதனால் இடையிலேயே எரிபொருள் குறைந்து, தானாகவே செயலிழந்து மற்ற செயற்கை கோளுடன் மோதும் வாய்ப்பு அதிகம். இதனால்தான் தொலைவில் இருப்பதை மேலும் தொலைவுக்கு அனுப்புகிறார்கள்.
இரண்டாம் வழி பூமிக்கு அருகில் சுற்றும் செயற்கை கோளாக இருந்தால், அதன் எரிபொருளை காலி செய்து வேகத்தை மட்டுப்படுத்தி, பூமியை நோக்கி வர வைத்து வளி மண்டலத்தில் எரித்து விடுவார்கள். பூமிக்கு அருகில் சுற்றும் சிறிய செயற்கை கோளாக இருந்தால், பூமியை நோக்கி வர வைத்தால் தானாகவே எரிந்துவிடும். ஆனால், மிகப் பெரிய செயற்கை கோளாகவோ, விண்கலமாகவோ இருந்தால் பூமியை நோக்கி வர வைத்தால் முற்றிலுமாக எரியாது. இதனால் பூமியை வந்தடையும்போது மக்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். எனவே இதைத் தவிர்க்க விண்வெளி கழிவுகளை நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் நகரின் தென் கிழக்கில் சுமார் 3,900 கி.மீ தொலைவில் உள்ள தென் பசிபிக் பெருங்கடலில் விழச்செய்து அழித்து விடுவார்கள். இதனால் மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் எந்தவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாதவாறு பாதுகாத்துக் கொள்ள முடியும். அந்தப் பகுதிக்குப் பெயர்தான் `விண்கலங்களின் கல்லறை'. செயற்கை கோள் எவ்வளவு பாதுகாப்பாக ஏவப்படுகிறதோ, அதை விட அதிக பாதுகாப்புடன் அதைக் கையாள்வதும் முக்கியம்.

No comments:

Post a Comment

Please Comment