ஈரோட்டில் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் 2012 ஆம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் ஓவியம், விளையாட்டு, கணினி, தையல் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். நியமிக்கப்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் வாரத்துக்கு 3 நாள்களுக்கு மட்டும் பணியாற்றுவர். இதற்கான மாத ஊதியமாக ரூ. 7 ஆயிரம் வழங்கப்படுகிறது.
சிறப்பு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களில் சிலர் முறையான கல்வித் தகுதி இல்லாமலும், போலியான சான்றிதழ்கள் கொடுத்தும் பணியில் சேர்ந்ததாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் சிறப்பாசிரியர்களின் கல்வி சான்றிதழ் சரிபார்க்கும் பணி, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கல்வி அதிகாரிகள் கொண்ட குழுவினர் சான்றிதழ்களை சரிபார்த்தனர். முதல்நாளில் 200 ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்ட நிலையில், மறுநாளில் கணினி அறிவியல், தையல் ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. பணிகள் முடிந்தவுடன் திட்ட இயக்குநருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Please Comment