திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே தாய், தந்தை இருவரையும் இழந்து வறுமையில் நர்சிங் படித்து வந்த மாணவி கட்டணமின்றி கல்வியை தொடர கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நடவடிக்கை எடுத்தார். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த கீர்த்தனா என்பவர் கடந்த 9ம் தேதி கலெக்டரை நேரில் சந்தித்து, நான் கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் 2ம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தாய், தந்தை ஆகிய இருவரும் 5 வயதிலேயே இறந்துவிட்டனர்.
பின்னர், என்னுடைய பாட்டி அம்பிகா தான் என்னை வளர்த்து வருகிறார். தினக்கூலி வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில், குடும்பத்தையும், என்னையும் கவனித்து வருகிறார். மேலும் தனியார் கல்லூரியில் என்னை நர்சிங் படிக்க வைத்து வருகிறார். மிகவும் வறுமையில் இருப்பதால் கல்வியை தொடர உதவிடுமாறு கோரினார். இதையடுத்து, கலெக்டர் கந்தசாமி உடனடி நடவடிக்கையாக மாணவி படித்து வரும் தனியார் கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டார். அப்போது கீர்த்தனாவின் குடும்ப வறுமை நிலையினை எடுத்துக்கூறி மாணவி கட்டணமின்றி தனது கல்வியை நிறைவு செய்ய உதவிடுமாறு கேட்டுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் மாணவி கட்டமணின்றி தனது கல்வியினை நிறைவு செய்ய அனுமதி அளித்துள்ளது. கட்டணமின்றி தனது கல்வியினை நிறைவு செய்ய உதவி செய்திட பரிந்துரை கடிதத்தினை கடந்த 19ம் தேதி கல்லூரி முதல்வர் ஜெ.சூர்யா ஜார்ஜிடம் கலெக்டர் கந்தசாமி வழங்கினார். இதன் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் மாணவி செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளித்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மாணவி தனது கல்வி படிப்பினை நிறைவு செய்ய உதவி செய்த கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Please Comment