கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், போத்துராவுத்தன்பட்டி ஊராட்சி, அய்யம்பாளையம் தொடக்கப் பள்ளியில் ரூ.44.60 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சிக் கூடத்துடன் கூடிய அம்மா பூங்கா, மெய்நிகர் வகுப்பு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
பூங்காவைத் திறந்து மெய்நிகர் வகுப்பைத் தொடக்கி வைத்து ஆட்சியர் த.அன்பழகன் பேசியது:
கல்வி வளர்ச்சிக்காக 14 வகையான திட்டங்களை வழங்கி வரும் தமிழக அரசு பாடத்திட்டங்களிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி செயல்முறை வகுப்பு, விளையாட்டு வாயிலாக கற்றல் உள்ளிட்ட பல்வேறு புதிய யுக்திகளை பயன்படுத்தி வருகிறது.
கல்வியை மாணவ, மாணவிகளுக்கு எளிதாக வழங்கவும், உலக அறிவை வழங்கவும் மெய்நிகர் வகுப்புகளை அரசு தொடங்கி வருகிறது. இந்த வகுப்புகள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு பாடங்களை பல்வேறு செயல் விளக்கம் வாயிலாக வழங்கலாம். பாடத்திட்டத்திற்கான விளக்கம், பல்வேறு மேற்கோள்கள் மூலம் எளிதாக பதிவிறக்கம் செய்து கற்றல் மற்றும் கற்பித்தலுக்கு பயன்படுத்தலாம்.
இதன் மூலம் தொடக்கக்கல்வி முதலே கணினிவழிக்கல்வியை இணைந்து வழங்க இயலும். இதனால் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் தீர்வுகளுக்கு எளிதான விளக்கமும், பயிற்சிகளும் வழங்க இயலும் என்றார் ஆட்சியர்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்த ஆட்சியர், மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சிவப்பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, கோட்டாட்சியர் லியாகத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்தங்கவேல்,
மாவட்டக் கல்வி அலுவலர் கபீர், அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலர் ரவிச்சந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
Please Comment