ஆரம்பக் கல்வியை முழுமையாகப் பெற்றால் வாழ்வாதாரம் மேம்படும்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் பேட்டி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆரம்பக் கல்வியை முழுமையாகப் பெற்றால் வாழ்வாதாரம் மேம்படும்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் பேட்டி


ஆரம்பக் கல்வியை முழுமையாகப் பெற்றால் பிற்காலத்தில் அவர்களது வாழ்வாதாரம் மேம்படும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.




திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் அலகுமலை கைலாசநாதர் கோயிலில் இந்து அறநிலையத் துறையினரால் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் சுற்று கம்பி வேலிப் பகுதியை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத் தலைவர் எல்.முருகன் வெள்ளிக்கிழமை கள ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். 



பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் நோக்கம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசின் திட்டங்களை கண்காணிக்கும் பணியாகும்.இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, பொது கழிப்பறை, தனி நபர் கழிப்பறை வேண்டி மனுக்களை அளித்துள்ளனர். இதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். 



கல்வி என்பது மிக முக்கியமானதாகும். ஆரம்பக் கல்வியை முழுமையாகப் பெற்றால் வாழ்வாதாரம் சரியான பாதையில் செல்லும். அதற்காக இந்த ஆணையத்தின் மூலம் கல்வி ஒதுக்கீட்டில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. கல்வித் துறை சரியான முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 
மக்களை தேடிச் சென்று குறை கேட்கும் முகாம்கள் நடத்துவதன் மூலம் அவர்கள் மன நிறைவு அடைவதோடு அவர்களின் குறைகளுக்கும் தீர்வு காணப்படுகிறது. அதேபோல் மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்கள் பற்றி மக்கள் ஒவ்வொருவரும் தெரிந்து தங்கள் தகுதிக்கேற்ப அதைப்பெற்று பயனடைய முடிகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன என்றார். 


தொடர்ந்து, திருப்பூர் சிக்கண்ணா கலைக்கல்லூரி அருகில் உள்ள ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியை அவர் பார்வையிட்டார். 


இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கயல்விழி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய முதுநிலை விசாரணை அலுவலர்கள் லிஸ்டர், இனியன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் செல்வக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சாந்தாதேவி, பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துசாமி, மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் வி.எம்.சண்முகம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Please Comment