வாணவேடிக்கை, மேளதாளத்துடன் அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை! - அசத்தும் திண்டுக்கல் கிராம மக்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வாணவேடிக்கை, மேளதாளத்துடன் அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை! - அசத்தும் திண்டுக்கல் கிராம மக்கள்

நம்ம பிள்ளைங்களை டாக்டரா, வக்கீலா இன்னும் பெரிய பெரிய ஆபீஸரா உருவாக்குறது வாத்தியாருங்கதானே... நாம என்னதான் காசு பணம் செலவு செஞ்சாலும் கத்துக் கொடுக்குறவங்க தெளிவா சொல்லிக்கொடுத்தாத்தானே பிள்ளைங்க பெரிய ஆளாக முடியும். அய்யா ஆபீஸராக்கூட ஆக வேணாம். ஒரு குழந்தை நல்ல மனுஷனா வளர்றதுக்கு காரணமே வாத்தியாருங்கதானே... அப்படிப்பட்ட வாத்தியார்களை ஆரத்திக்காட்டியும், ஊக்கப்படுத்தணுமா இல்லையா? அதேபோல படிக்குற பிள்ளைங்ககிட்ட நாங்க இருக்கோம் செல்லங்களா நல்ல படிங்கன்னு உற்சாகப்படுத்தணும்ல. இது ரெண்டையும்தான் நாங்க செய்றோம். அதுக்குத்தான் இந்த சீர்வரிசை'' என்கிறார்கள் கட்டக்காமன்பட்டி மக்கள்.




Click here > திண்டுக்கல் மாவட்டம் காட்ரோடு கொடைக்கானல் சாலையில் உள்ளது கட்டக்காமன்பட்டி. இங்கு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. உள்ளூர் மற்றும் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு படித்து வருகிறார்கள். சுகாதாரம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் இந்தப் பள்ளி, பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. அரசுப் பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தைகளைச் சிறந்த முறையில் உருவாகும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையிலும் குழந்தைகள் படிப்பதற்குத் தேவையான பொருள்களையும் ஆண்டுதோறும் சீர்வரிசையாகக் கொடுப்பது இந்தக் கிராமத்து மக்களின் வழக்கம். ஒவ்வோர் ஆண்டும் குழந்தைகள் தினத்தன்று பள்ளிக்குத் தேவையான போர்டு, மாணவர்கள் அமரும் டெஸ்க், ஆசிரியர்கள் பயன்படுத்தும் மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருள்களை மக்கள் சீர்வரிசையாக வழங்குவார்கள்.



அந்த வகையில் குழந்தைகள் தினமான இன்று கட்டக்காமன்பட்டி ஊர் பொதுமக்கள் ஒன்றாகச் சேர்ந்து சீர்வரிசை கொடுத்தார்கள். கிராமத்து கோயிலான பட்டாளம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு பள்ளியை நோக்கி ஊர்வலமாக வந்தார்கள். பெண்கள் தலையில் தேங்காய் வாழைப்பழம், பழங்கள், பென்சில்கள், பேனாக்கள் நிரம்பிய தட்டுகளை சுமந்து வந்தார்கள். ஆண்கள், பீரோ, மேஜைகளைத் தூக்கி வந்தார்கள். பள்ளிக்குத் தேவையான பல்வேறு பொருட்களை ஒவ்வொருவரும் சுமந்து வந்தனர். கிராமங்களில் சீர்கொடுப்பது போல பெண்கள் தட்டுகளுடனும், வானவேடிக்கையுடன், மேளதாளங்கள் முழுங்க கிராமத்தின் தெருக்கள் வழியாக ஊர்வலமாக வந்து பள்ளியை அடைந்தனர். பள்ளிக்குச் சீர்வரிசை கொண்டுவந்த கிராம மக்களை, மாவட்டக் கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம், வட்டாரக் கல்வி அலுவலர்கள் எஸ்தர், தெரசா மற்றும் தலைமை ஆசிரியர் விஜயா மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர். தாங்கள் கொண்டு வந்த சீர்வரிசைகளை பள்ளியில் ஒப்படைத்த கிராமத்தினர், தங்கள் குழந்தைகளுக்குச் சிறப்பான கல்வியைக் கற்றுக் கொடுக்குமாறு ஆசிரியர்களை வணங்கிக் கேட்டுக் கொண்டனர்.

''பணம் படைச்சவங்க பிள்ளைங்கள தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறாங்க. எங்க ஊர்ல பணம் இருக்கவங்க இல்லாதவங்க எல்லாரும் இருக்காங்க. பெரும்பாலான குழந்தைகள் இங்கே இருக்கிற அரசுப் பள்ளியில்தான் படிக்கிறாங்க. தனியார் பள்ளிக்கு இணையா இங்கயிருக்க ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்குறாங்க. பிள்ளைங்களும் நல்லா படிக்கிறாங்க. சுகாதாரம், படிப்பு, விளையாட்டுன்னு இந்த பள்ளி தொடர்ந்து விருது வாங்கிட்டு இருக்கு. எங்க குழந்தைகளுக்குச் சிறந்த கல்வி கொடுக்கிற ஆசிரியர்களை ஊக்குவிக்குறதுக்கும், பிள்ளைங்களை ஊக்குவிக்கவும் வருஷாவருஷம் சீர்வரிசை கொடுக்கிறோம். எங்க கிராமத்து குழந்தைகளோட எதிர்காலம் சிறப்பா இருக்கணும்னு நாங்க இதைத் தொடர்ந்து செய்றோம்'' என்கிறார்கள் ஊர் மக்கள்.
பள்ளியின் தேவைகள் அனைத்துக்கும் அரசை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குத் தேவையான பொருட்களை ஆண்டுதோறும் சீர்வரிசையாக வழங்கும் கட்டக்காமன்பட்டி பொதுமக்கள் பாராட்டுக்குரியவர்கள்.

No comments:

Post a Comment

Please Comment