8900 பள்ளிகளில் மாணவர்கள் குறைவு: கணக்கெடுப்பில் அதிர்ச்சி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

8900 பள்ளிகளில் மாணவர்கள் குறைவு: கணக்கெடுப்பில் அதிர்ச்சி

சமூகநலத்துறை எடுத்த கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 8900 பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கடந்த மாதம் அறிவித்தார். முதற்கட்டமாக சென்னை, வேலூர் உள்ளிட்ட 3 இடங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. 






இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் இயங்கும் அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு மையங்களில் பணியாற்றும் பொறுப்பாளர், சமையலர், உதவியாளர் ஆகியோரின் உபரிப் பணியிடங்களை குறைத்து பணி நிரவல் செய்வதற்காக சமூக நலத்துறை பணியாளர்கள் கணக்கெடுப்பு நடத்த அரசு உத்தரவிட்டது. அதில், குறைவான மாணவர்கள் உள்ள மையங்களில் பணியாற்றும் பணியாளர்கள் வேறு பள்ளிக்கு மாற்ற இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன்படி கடந்த மாதம் 26ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளில் இயங்கும் அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் குறித்து சமூகநலத்துறை கணக்கெடுப்பு நடத்தத் தொடங்கியது. 




இது வரை 32 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 8909 அரசுப் பள்ளிகளில் 25க்கும் குறைவாகவே மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டம் வாரியாக தயாரிக்கப்பட்ட பட்டயலின்படி 25க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் மாவட்டங்களில் முதல் மாவட்டமாக சேலம் மாவட்டம் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் 821 பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகின்றனர். இரண்டாவது இடத்தில் வேலூர் மாவட்டம் உள்ளது. அங்கு 451 பள்ளிகளிலும், மூன்றாவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 420, நான்காவது சிவகங்கை மாவட்டத்தில் 417, ஐந்தாவதாக திருப்பூர் மாவட்டத்தில் 409, எட்டாவதாக ஈரோடு மாவட்டத்தில் 355, சென்னை மாவட்டத்தில் 55 பள்ளிகளிலும் குறைவாக மாணவர்கள் படித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு காரணம் அடிப்படை வசதிகள் இல்லாமை தான் என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும், அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும், கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்ய வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கேட்டு வருகின்றன. இந்நிலையில், 8909 பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்கள் படிப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அந்த பள்ளிகளை மூடவோ அல்லது அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவோ நடவடிக்கை எடுக்கலாம் என்றும் ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

No comments:

Post a Comment

Please Comment