போச்சம்பள்ளி அருகே 1 மாணவிக்காக இயங்கும் அரசு பள்ளி
போச்சம்பள்ளி அருகே ஒரு மாணவிக்காக அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பெரிய ஜோகிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
கடந்த 1956ல் கட்டப்பட்ட இப்பள்ளியில், ஜோகிப்பட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். தற்போது பலர் நல்ல நிலையில் உள்ளனர். காலப்போக்கில் பள்ளியில் மாணவர் சேர்க்கை சதவீதம் குறைந்தது. கடந்த ஆண்டு 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர்.
ஆனால் நடப்பாண்டில் இப்பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டுமே படித்து வருகிறார். 4ம் வகுப்பு படிக்கும் அவருக்கு பாடம் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் யாரும் கிடையாது. ஒரு மாணவிக்காக தலைமை ஆசிரியை மட்டுமே பணியில் உள்ளார். அதேபோல் சத்துணவு ஊழியர் ஒருவரும் உள்ளார். தற்போதைய நிலையில், இந்த 3 பேருக்காகவே பள்ளி இயங்கி வருகிறது.
இது குறித்து தலைமை ஆசிரியை ரேகா கூறுகையில்,
தனியார் பள்ளி மோகத்தால் கிராமத்தில் உள்ள மாணவர்களும் அங்கு சென்று விட்டனர். கிராம மக்களை ஒருங்கிணைத்து மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தியும் பெற்றோர் புறக்கணித்து விட்டனர். மாணவி லேகா மட்டும் பயின்று வருகிறார். அவரும் தனியாக படிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார். மாணவர்களை சேர்க்க பல்வேறு முயற்சிகள் எடுத்தும் பயனில்லை, என்றார்.
மாணவி ஸ்ரீலேகாவிடம் கேட்டபோது, தனிமையில் படிப்பதற்கு சிரமமாக உள்ளது. விளையாடக்கூட மாணவர்கள் இல்லை. இதனால் பள்ளிக்கு வருவதற்கே பிடிக்கவில்லை, என்றார்
No comments:
Post a Comment
Please Comment