பட்டொளி வீசிப் பறக்கிறது மூவர்ணக் கொடி. அந்தக் கொடியைத் தனது மனக்கண்ணில் முதலில் ஏற்றி மகிழ்ந்தவர் பிங்கலி வெங்கய்யா. காந்தியின் கட்டளையை ஏற்று, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்ததுதான் இந்திய தேசியக் கொடி.
1878-ல் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் பெடகள்ளேபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தவர் வெங்கய்யா.
தாய்வழிப் பாட்டனாரான சலபதி ராவின் வீட்டில் வளர்ந்த வெங்கய்யா, பதின் வயதுகளில் மச்சிலிப்பட்டணத்தில் வசித்தார். அப்போது பருத்தி பயிரிடுவது உட்பட பல விஷயங்களைக் கற்றுக்கொண்டார். இந்திய தேசிய ராணுவத்தில் சேருமாறு இளைஞர்களுக்கு சுபாஷ் சந்திர போஸ் விடுத்த அழைப்பை ஏற்று, 19-வது வயதில் ராணுவப் பயிற்சி பெற்று, ஆப்பிரிக்காவில் நடந்த போயர் யுத்தத்திலும் (1899-1902) பங்கெடுத்துக்கொண்டார். ஆப்பிரிக்காவில் வெங்கய்யா தங்கியிருந்தபோதுதான் காந்தி யைச் சந்தித்து, அவரது சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டது. இந்தியா திரும்பியதும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தலைமறைவு இயக்கங்களில் பங்கெடுத்துக்கொண்டார். இளமைக் காலத்தி லிருந்து வேளாண்மையின் மீதிருந்த ஆர்வமும் தொடர்ந்தது. பருத்திச் சாகுபடியில் தீவிரக் கவனம் செலுத்தினார்.
வேளாண் துறையில் பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டார். கல்வியின் மீதிருந்த ஆர்வத்தால், லாகூருக்குச் சென்று ஆங்கிலோ-வேதிக் பள்ளியில் சேர்ந்து சம்ஸ்கிருதம், உருது, ஜப்பானிய மொழிகளைக் கற்றுக்கொண்டார்.
1913-ல் ஆந்திரத்தின் குண்டூர் மாவட்டத்திலுள்ள பாபட்லா என்ற ஊரில் ஜப்பானிய மொழியிலேயே முழுச் சொற்பொழிவையும் ஆற்றினார் வெங்கய்யா. அதனால், ஜப்பான் வெங்கய்யா என்ற சிறப்புப் பெயரும் அவருக்கு உண்டானது. காங்கிரஸின் நிர்வாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் வெங்கய்யா. 1906-ல் கொல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சுதேசித் தீர்மானம் அவரை வேளாண் துறையிலும் சுதேசியத்தைப் பரிசோதிக்கவைத்தது.
அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட கம்போடிய பருத்தி விதைகளையும் இந்தியப் பருத்தி விதைகளையும் கலப்புண்டாக்கி, புதிய பருத்தி ரகங்களை உருவாக்கினார். அவர் உருவாக்கிய தரமான பருத்தி விதைகளைப் பற்றி அறிந்துகொண்ட ‘ராயல் அக்ரிகல்சுரல் சொசைட்டி ஆஃப் லண்டன்’ அவரைக் கௌரவ உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டு பெருமைப்படுத்தியது. இதையடுத்து, பட்டி வெங்கய்யா என்று இன்னொரு அடைமொழியும் அவருக்குச் சூட்டப்பட்டது.
அடுத்து, ரயில்வே பணியில் சேர்ந்து பெங்களூருவிலும் பெல்லாரியிலும் பணிபுரிந்தார். சென்னையில் அப்போது பிளேக் நோய் பரவிக்கொண்டிருந்தது. ரயில்வே பணியிலிருந்து வெளியேறி, கொஞ்ச காலம் பிளேக் ஆய்வாளராகவும் பணிபுரிந்தார்.
1916-ல் அவர், இந்தியாவுக்கு ஒரு தேசியக் கொடி (எ நேஷனல் ப்ளாக் ஃபார் இந்தியா) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். தேசியக் கொடிக்கான 13 வடிவமைப்புகளைக் கொண்டிருந்தது அந்தப் புத்தகம். 1918 தொடங்கி 1921 வரைக்கும் காங்கிரஸின் ஒவ்வொரு கூட்டத்திலும் இந்தியாவுக்கு ஒரு தனிக் கொடி வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போது ஆந்திர தேசியக் கல்லூரியில் அவர் விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
1921-ல் விஜயவாடாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டம் நடந்தபோது, வெங்கய்யா மீண்டும் ஒருமுறை காந்தியைச் சந்தித்தார். அப்போது தேசியக் கொடி பற்றிய தனது புத்தகத்தையும் தான் வடிவமைத்த கொடியின் வடிவமைப்புகளையும் அவரிடம் காட்டினார். எல்லா காலத்திலும், எல்லா தலைமுறையையும் எழுச்சியுறச்செய்யும் வகையில் ஒரு புதிய வடிவமைப்பை உருவாக்குமாறு அவரைக் கேட்டுக்கொண்டார் காந்தி. ஒரே இரவில் வெங்கய்யா உருவாக்கிக் கொடுத்த தேசியக் கொடியை காங்கிரஸ் கூட்டத்தில் அறிமுகப்படுத்தி ஒப்புதலையும் பெற்றார் காந்தி.
அந்த வரலாற்றுச் சந்திப்பைப் பற்றி காந்தி தனது ‘யங் இந்தியா’ பத்திரிகையிலும் கட்டுரை எழுதினார். விஜயவாடாவுக்கு நான் சென்றிருந்தபோது சிவப்பு, பச்சை இரு வண்ணங்களும் சக்கரமும் இருக்குமாறு ஒரு கொடியை வடிவமைக்கச் சொன்னேன். மூன்றே மணி நேரங்களில் அதற்கு உருவம் கொடுத்துவிட்டார் வெங்கய்யா. பிறகு, அந்தக் கொடியில் வெள்ளை நிறத்தையும் சேர்ப்பதற்கு நாங்கள் முடிவெடுத்தோம். உண்மையையும் அகிம்சையையும் வெள்ளை நிறம் குறிக்கிறது என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டார் காந்தி. அதன் பிறகு, ஜன்டா வெங்கய்யா என்று இன்னொரு சிறப்புப் பெயரும் சேர்ந்துகொண்டது. ஜன்டா என்றால் இந்தியில் கொடி என்று அர்த்தம்.
1947-லிருந்து தீவிர அரசியலிலிருந்து விலகிவிட்டார் வெங்கய்யா. அதன் பிறகு, வெங்கய்யாவின் ஆர்வம் ரத்தினக் கற்கள் பற்றிய ஆராய்ச்சியை நோக்கி மாறியிருந்தது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் எந்தெந்த வகையான ரத்தினக் கற்கள் கிடைக்கின்றன என்று தேடித் திரிந்து இந்தியாவை வலம்வந்தார்.
அது குறித்து இந்திய அரசின் ஆலோசகராகவும் பணிபுரிந்தார். இப்போது அவருக்குச் சூட்டப்பட்ட பெயர், டைமண்ட் வெங்கய்யா.
தான் இறந்த பிறகு தன்னைத் தேசியக் கொடியால் மூட வேண்டும் என்று விரும்பினார் வெங்கய்யா. அந்த ஆசை நிறைவேறியது. 1963-ல் அவர் காலமானபோது, அவர் வடிவமைத்த தேசியக் கொடி அவர் மீது போர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
என்.டி.ராமாராவ் ஆந்திர முதல்வராக இருந்தபோது இரட்டை நகரங்களான ஹைதராபாத்தையும் செகந்திராபாத்தையும் இணைக்கும் சாலையில் ஹுசேன் சாகர் ஏரிக் கரையில் 33 ஆந்திர ஆளுமைகளுக்குச் சிலைகளை நிறுவினார். அவற்றில் பிங்கலி வெங்கய்யாவின் சிலையும் ஒன்று.
தனி தெலங்கானா கோரி போராட்டங்கள் நடந்தபோது, அவற்றில் 17 சிலைகள் காணாமல்போயின. தனி மாநிலம் அமைக்கப்பட்டாகிவிட்டது. தற்போதைய தெலங்கானா முதல்வர், காணாமல்போன அந்தச் சிலைகளுக்கும் தெலங்கானாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். நாடு முழுவதற்கும் சொந்தமான விடுதலைப் போராட்ட வீரரை மாநில எல்லைகளுக்குள் அடக்க முயற்சிப்பதை என்னவென்பது?ஒருமுறை ஜப்பானிய மொழியிலேயே முழுச் சொற்பொழிவையும் ஆற்றினார் வெங்கய்யா. அதனால், ஜப்பான் வெங்கய்யா என்ற சிறப்புப் பெயர் அவருக்கு உண்டானது. தேசியக் கொடியை வடிவமைத்த பிறகு, ஜன்டா வெங்கய்யா என்று இன்னொரு பெயரும் சேர்ந்துகொண்டது.
ஜன்டா என்றால் இந்தியில் கொடி என்று அர்த்தம். ஒருகட்டத்தில், வெங்கய்யாவின் ஆர்வம் ரத்தினக் கற்கள் பற்றிய ஆராய்ச்சியை நோக்கி மாறியிருந்தது. இப்போது அவருக்குச் சூட்டப்பட்ட பெயர், டைமண்ட் வெங்கய்யா!
🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment