இந்திய கிராமப்புறங்களில் படிக்கும் குழந்தைகளின் கல்வித் திறன், கடந்த சில ஆண்டுகளில் எவ்வளவோ முயற்சி எடுத்தும் முன்னேறவில்லை என்பதையே சமீபத்தில் வெளிவந்துள்ள 2018-ம் ஆண்டுக்கான கல்விநிலை ஆண்டறிக்கை (ஆசர்) தெரிவிக்கிறது.
2008-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கல்வி முன்னேற்றத்தை அளவிட்டதில், ஒவ்வொரு வகுப்பிலும் நன்றாகப் படிக்கும் மிகச் சில மாணவர்களைத் தவிர, பெரும்பாலான மாணவர்கள் தாங்கள் பயிலும் வகுப்புக்கேற்ற பாடங்களைப் பயிலும் திறனற்றவர்களாகவே இருக்கின்றனர் என்பது தெரியவந்திருக்கிறது.
2018-ம் ஆண்டின் ஆசர் அறிக்கைக்காக 596 கிராமப்புற மாவட்டங்களில் 5.4 லட்சம் மாணவர்களின் திறன் பரிசோதிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 53.1% பேரால் இரண்டாம் வகுப்புக்கான பாடங்களை 2008-ல் படிக்க முடிந்தது. ஆனால், 2018-ல் 44.2% பேரால்தான் அப்படிப் படிக்க முடிந்திருக்கிறது. கணிதங்களைப் பயிலும் திறனிலும் இதே நிலைதான் என்றாலும், 2016 தொடங்கி சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
அரசுப் பள்ளிகளில் 1.5%, தனியார் பள்ளிகளில் 1.8% என்று இது பதிவாகியிருக்கிறது. இதே காலத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கற்கும் திறன் 67.9%லிருந்து 65.1% ஆக குறைந்திருக்கிறது. தனியார் பள்ளி மாணவர்களின் கற்கும் திறனிலும் வீழ்ச்சியிருக்கிறது. எனினும், நகர்ப்புற, கிராமப்புற மாணவர்களுக்கிடையே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு தெரிகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 46.3% பேரால் இரண்டாம் வகுப்புப் பாடங்களைப் படிக்க முடிந்திருக்கிறது. 2008-ல் இது 26.7% ஆக இருந்தது. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், தமிழக மாணவர்களின் கற்கும் திறன் அதிகரித்திருக்கிறது என்று மகிழ்ச்சியடைந்தாலும், சரிபாதி மாணவர்களுக்கும்மேல் கல்வியில் பின்தங்கியிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கிராமப்புற மாணவர்களில் 27.1% மாணவர்கள் மட்டுமே வகுத்தல் கணக்கைச் செய்யும் திறனைப் பெற்றிருக்கிறார்கள். 2008-ல் இது 9% ஆக இருந்தது.
கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்ற சட்டம் இயற்றிய பிறகு, பள்ளிக்கூடங்களில் சேருவோர் எண்ணிக்கைக் கணிசமாக உயர்ந்துள்ளது. படிக்கும் வயதில் உள்ள குழந்தைகளில் 96% பேர் இப்போது பள்ளிக்கூடங்களுக்குச் செல்கின்றனர். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு பின்னணியிலிருந்து படிக்க வருகிறார்கள். அங்கன்வாடி மையங்களில் படிக்கும் ஏழைக் குழந்தைகள் முதல் படிப்பு-விளையாட்டுக்கான எல்லா சாதனங்களையும் கொண்ட நர்சரிப் பள்ளிகள் வரை சூழல் வேறுபடுகிறது.
மாணவர்களும் பலதரப்பட்டவர்கள், பிரச்சினைகளும் பலதரப்பட்டவை என்பதால், பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது. இந்தியக் குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறை செலுத்தும் செயலை அரசு முழுமையாக மேற்கொள்ளவில்லை என்பதில் சந்தேகமே வேண்டாம். இனியாவது, மத்திய - மாநில அரசுகள் கிராமப்புறப் பள்ளிக்கல்விக்கு உரிய கவனத்தைக் கொடுக்க வேண்டும்.
🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment