* பட்டியலை சரிபார்ப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம்
* முகாம்களை நடத்த மாவட்ட நிர்வாகம் சுறுசுறுப்பு
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க வரும் 23, 24ம் தேதி கடைசி வாய்ப்பாக உள்ள நிலையில், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முகாம்களை நடத்த தீவிரம் காட்டி வருகின்றனர். அரசியல் கட்சியினரும் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளதால், இந்த தேர்தலில், தகுதியுள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, 18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்கவும், விடுபட்டோர் தங்கள் பெயரை பட்டியலில் இணைத்துக் கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி திருத்தம் செய்யவும் முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மண்டல அலுவலகத்திலும், சிறப்பு முகாம் நடக்கும் நாட்களில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இலவசமாக 'படிவம் - 6' கிடைக்கும். 18 முதல் 25 வயது உள்ளோர்
இந்த படிவத்தை பூர்த்தி செய்து, ஒரு புகைப்படம் ஒட்ட வேண்டும். இதற்காக, 18 வயது பூர்த்தியானதற்கான ஆவணம் - பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், முகவரி சான்றுக்கான ஆவணம் - ஆதார், 'காஸ்' ரசீது பில், ரேஷன் கார்டு மற்றும் இதர ஆவணங்களில் ஏதேனும் ஒன்று என, இந்த இரண்டு ஆவணங்களையும், 'படிவம் - 6' உடன் இணைத்து, மண்டல அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலரிடமோ, சிறப்பு முகாம்களில், வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமோ வழங்க வேண்டும். உரிய கள ஆய்வுக்கு பின், இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.
அதேபோல், பெயர், முகவரி திருத்தம், ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு முகவரி மாற்றம், வாக்காளர் அட்டை காணாமல் போனது போன்றவற்றுக்கு அதற்குரிய படிவங்கள் மற்றும் உரிய ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.
புதிதாக பட்டியலில் சேரும் வாக்காளர்கள் அனைவருக்கும், வண்ண வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கும். அதன்படி, வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் வருகிற 23 மற்றும் 24ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதுகுறித்து, தமிழக தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க வசதியாக தமிழகம் முழுவதும் வருகிற 23 மற்றும் 24ம் தேதிகளில் காலை 9.30 முதல் மாலை 5.30 வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மக்களவை தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும்.
விடுபட்ட வாக்காளர்கள் இதை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். 2019 ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
ஆன் லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு மக்களவைத் தேர்தலில் வேட்பு மனுதாக்கல் வரை வாய்ப்பு அளிக்கப்படும். வாக்களிக்கும் தகுதியை பெற, வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பே விண்ணப்பித்திருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையே, அரசியல் கட்சிகள் சார்பில், இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட செயலாளர் பெற்று, அதனை மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலைய முகவர்கள் ஆகியோரிடம் வழங்கி, 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களும்-வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாத பெயர்களையும்- புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறதா;
தொகுதியிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்கள் தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை தீவிர ஆய்வு செய்து வருகின்றனர்.
இறுதி வாக்காளர் பட்டியல்
இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தற்போது 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 பேர் உள்ளனர். இதில், ஆண்கள் 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 பேர். பெண்கள் 2 கோடியே 98 ஆயிரத்து 60 ஆயிரத்து 765 பேர். இதர பிரிவினர் 5472 பேர் அடங்குவர். மேலும் வாக்காளர் பட்டியலில் வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 97 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Please Comment