காவல் பணிக்கு நடுவில் விளையாட்டு!- 50 வயதிலும் சாதிக்கும் பெண் காவலர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

காவல் பணிக்கு நடுவில் விளையாட்டு!- 50 வயதிலும் சாதிக்கும் பெண் காவலர்

உடலினை உறுதி செய் என்றார் பாரதியார். உடல் ஆரோக்கியம், கட்டுக்கோப்பாக வைத்திருப்பது, தன்னம்பிக்கையை அதிகரிப்பது ஆகியவற்றில் விளையாட்டு முக்கிய பங்காற்றுகிறது. பரபரப்பான தற்போதைய சூழலில், சதா வேலையைப் பற்றிய சிந்தனையுடனேயே இருக்கும் மனிதர்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதில் பங்கு வகிப்பது விளையாட்டுதான். 

விளையாட்டுகளில் பங்கேற்க எதுவுமே தடையில்லை என்கிறார் கோவையைச் சேர்ந்த பெண் காவலர். சிறு வயது முதலே தடகளப் போட்டிகளில் ஈடுபட்டு, இடையில் 13 வருடங்கள் அதிலிருந்து விடுபட்டாலும், பின்னர் மீண்டும் களமிறங்கி, தொடர்ந்து தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை குவித்து வருகிறார் இவர். காவலர்கள் மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் இந்த பெண் காவலரின் பெயர் ஸ்ரீரஞ்சனி(50). திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைப் பூர்வீகமாக கொண்ட ஸ்ரீரஞ்சனி, தற்போது கோவையில் வசித்து வருகிறார்."கடும் நெருக்கடிகளைக் கொண்ட காவல் பணியில் பயிற்சிக்கு எப்படி நேரம் கிடைக்கிறது? காவல் துறை அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு எப்படி உள்ளது? இதுவரை சாதித்தது என்ன?" என பல கேள்விகளுடன், கோவை மாநகர காவல் துறையின் ஆயுதப்படைப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வரும் ஸ்ரீரஞ்சனியை அணுகினோம். "மன்னார்குடியில் பள்ளியில் படித்தபோதே, விளையாட்டில் மிகுந்த ஆர்வம். 

உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வாலிபால் போட்டிகளில் கவனம் செலுத்தி, பல வெற்றிகளைப் பெற்று, பதக்கங்களை வென்றேன்.குறிப்பாக, வாலிபால் போட்டியில் மாவட்ட அளவிலான வீராங்கனையாக இருந்துள்ளேன். 18 வயதில் திருமணம். கணவர் தட்சிணாமூர்த்தி. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தற்போது அவர்களுக்கும் திருமணமாகி, எனக்குப் பேரக் குழந்தைகளும் பிறந்துவிட்டனர். பள்ளியில் படிக்கும்போது விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்தபோதிலும், திருமணத்துக்குப் பின்னர் குடும்ப சூழல் காரணமாக விளையாட முடியவில்லை. எனினும், பட்டப் படிப்பு, சிறப்பு படிப்புகளில் கவனம் செலுத்தி வந்தேன். எனினும், தினமும் அதிகாலை எழுந்து ஓடுவதை தவற விட்டது கிடையாது. இந்த நிலையில், 2001-ல் காவல் துறையில் இரண்டாம்நிலைக் காவலராக பணியில் சேர்ந்தேன். அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்று, தற்போது தலைமைக் காவலராக உள்ளேன். பணியில் சேர்ந்த பிறகு சில மாவட்டங்களில் பணியாற்றி, பின்னர் கோவைக்கு வந்தேன். காவலர் பயிற்சிக் கல்லூரி மைதானத்தில் தினமும் காலை ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவேன். 

இதைப் பார்த்த சிறப்பு பிரிவு எஸ்.எஸ்.ஐ. சாமிநாதன், "நீ நன்றாக ஓடுகிறாய், ஏன் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது? கலந்து கொண்டால் உனக்கு வெற்றி நிச்சயம்? என்றார். 13 ஆண்டுகளுக்கு பின்னர்... இது என் மனதில் ஆழமாகப் பதிந்தது. என் கணவர் மற்றும் குடும்பத்தினர் இதற்கு ஒப்புதல் அளித்து உற்சாகமூட்டினர். அப்போது எனக்கு 42 வயது. 2011-ல் கோவை மாவட்ட அளவில், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடகள விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டேன். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 1,500 மீட்டர் ஒட்டப்பந்தயம் ஆகிய மூன்று விளையாட்டுகளில் பங்கேற்றேன். மூன்றிலுமே தங்கப் பதக்கம் வென்றேன். 13 வருட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கி, முதல் போட்டியிலேயே தங்கம் வென்றதை அனைவரும் பாராட்டினார். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. இதையடுத்து, காரைக்குடியில் நடந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு, மூன்று போட்டிகளிலும் வெள்ளிப் பதக்கம் வென்றேன். பின்னர், பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு, வெண்கலப் பதக்கம் வென்றேன். தொடர்ந்து, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தினேன். 

இவற்றிலும் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு, பதக்கங்களை வென்று வருகிறேன். பெங்களூருவில் தேசிய அளவில் 2012-ல் நடைபெற்ற தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கலம், 2013-ல் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதலில் வெள்ளி,கோவையில் 2014-ல் நடைபெற்ற தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி, கோவாவில் 2015-ல் நடைபெற்ற போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம், தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளி, 2016-ல் மைசூரில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதலில் வெள்ளி, ஐதராபாத்தில் 2017-ல் உயரம் தாண்டுதலில் வெள்ளி, நடப்பாண்டு ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் நடந்த தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கங்களை வென்றேன். வயது ஒரு தடையல்ல! கடந்த 6 ஆண்டுகளில் 31 தங்கம், 16 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளேன். விளையாடுவதற்கு வயது ஒரு தடை அல்ல. நான் தடகளப் போட்டிகளில் பங்கேற்கும்போது, "இந்த வயதில் எதற்கு விளையாட்டு?" என சிலர் கேலி, கிண்டல் செய்தனர். நான் அதை பொருட்படுத்தவில்லை. மாறாக, சாதிக்க வேண்டுமென உறுதியேற்று, அதற்காக தயார்படுத்திக்கொண்டேன். கணவர் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து ஊக்கமளித்து, உறுதுணையாக உள்ளனர். மேலும், காவல் துறை ஆணையர்களாக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், அமல்ராஜ், பெரியய்யா, தற்போதைய ஆணையர் சுமித்சரண் ஆகியோரது ஒத்துழைப்பும் விளையாட்டுப் போட்டியில் சாதிக்க உதவியாக இருந்தது. பேரக் குழந்தைகள் பிறந்த நிலையிலும், தொடர்ந்து போட்டிகளில் கலந்துகொண்டு, வெற்றி பெறுவதையறிந்த அப்போதைய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், என்னை அழைத்துப் பாராட்டியது மறக்க முடியாத நிகழ்வாகும். காவல் துறையினருக்காக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளேன்" என்றார் ஸ்ரீரஞ்சனி பெருமிதத்துடன். சாதிக்க வயதோ, வேலையோ தடை அல்ல... மற்ற பணிகளைப்போல கிடையாது காவல் பணி. நேரம், காலம் பார்க்காமல் மக்களுக்காக உழைக்க வேண்டும். பணி முடிந்து இரவு தாமதமாக வீட்டுக்கு வந்தாலும், 

அதிகாலை எழுந்து ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதை நான் தவறவிட்டது கிடையாது. பயிற்சிகளை முடித்துவிட்டு 8 மணிக்குள் பணிக்குப் புறப்பட்டு விடுவேன். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் என்னைப் போன்ற காவலர்களுக்கு, பயிற்சிக்காக தனி நேரம் ஒதுக்கினால், மேலும் பல போட்டிகளில் வென்று சாதனை படைக்க உறுதுணையாக இருக்கும் என்பதே என் வேண்டுகோள். சாதிப்பதற்கு வயதோ, வேலையோ ஒரு தடையே அல்ல. வேலையைபோல, விளையாட்டிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்" என்று தன்னம்பிக்கையூட்டுகிறார் ஸ்ரீரஞ்சனி.

No comments:

Post a Comment

Please Comment